சென்னை: ”நாடு முழுவதும் ஒரே நீட் தேர்வு என்ற பாஜக அரசு – மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் தனி நுழைவுத்தேர்வு & தனி இடஒதுக்கீடுக்கு அனுமதி கொடுத்திருப்பதால் – தமிழகத்திலும் 69% இடஒதுக்கீட்டை அனுமதித்து நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இந்தியா முழுவதும் ஒரே நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என்ற பாணியில் மிகவும் பிடிவாதமாக வாதிட்டு, தமிழக மாணவர்களுக்கு மறக்க முடியாத மாபெரும் துரோகம் செய்த மத்திய பாஜக அரசு, இப்போது ‘தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு (INI-CET) மட்டும் தனி நுழைவுத் தேர்வு’ என்று அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர் போன்ற 11 கல்லூரிகளில், 2021-ல் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டு, தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு சித்தூரில் தேர்வு மையங்களை ஒதுக்கி அடாவடியாகக் குழப்பங்களைச் செய்து கொண்டிருப்பது அநீதியின் உச்சக்கட்டமாகும்!

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 2,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்கள் 1,500 ரூபாய் செலுத்தினாலே போதும் என்று இன்னொரு ஒரு பேதமும், துரோகமும் இழைக்கப்பட்டுள்ளது!

மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையில், அந்தந்த மாநிலங்களின் தேர்வு முறை நீடிக்கட்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்கள் வாதிட்ட போதும், குறிப்பாகத் தமிழ்நாடு சார்பில் வாதிடப்பட்ட போதும், ‘அதெல்லாம் முடியாது. நாடு முழுவதும் ஒரே தேர்வு’ என்று வீண் பிடிவாதம் செய்து, ‘ஏன் எய்ம்ஸ் கல்லூரிகளுக்குக் கூட நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்கிறோம்’ என்று நீதிமன்றங்களிலேயே திசை திருப்பும் வகையில் வாதிட்டது மத்திய பாஜக அரசு.

இதனால் தமிழகத்தில் 2017 முதல் நீட் தேர்வை மத்திய பாஜக அரசும் அதிமுக அரசும் கூட்டணியாக இணைந்து வலுக்கட்டாயமாகத் திணித்ததால், இதுவரை 13 மாணவ, மாணவியர் உயிர்ப் பலியாகியிருக்கிறார்கள்.

தமிழகச் சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய இரு மசோதாக்களை, திட்டமிட்டு வேண்டுமென்றே கிடப்பில் போட்டு, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவே முடியாது என்று அந்த மசோதாக்களை நிராகரித்தார்கள்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவக் கல்விக்கும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை என்று அராஜகமாகக் கூறினார்கள். இன்றைக்கு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு என்பது ஓர வஞ்சகத்தின் உச்சக்கட்டமாகும்.

மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளின் கண்களில் ‘வெண்ணெயும்’, மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளின் கண்களில் ‘சுண்ணாம்பும்’ தடவி பேதப்படுத்தி, கூட்டாட்சிக்கு விரோதமான, மாநில உரிமைகளுக்கு எதிரான இந்த நிலைப்பாடு, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை, முதுநிலை மருத்துவக் கனவைச் சுக்கு நூறாக நொறுக்கி எறியும் பச்சை சர்வாதிகாரப் போக்காகும்.

மாநிலங்களில் உள்ள முதுநிலை மருத்துக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில், தனி இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்று மத்திய அரசே உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. மாணவர் சேர்க்கை தகுதி (மெரிட்) அடிப்படையிலேயே நடக்கும் என்று விதண்டாவாதம் செய்தார்கள். ஏன், இட ஒதுக்கீடே அளிக்க முடியாது என்று இடஒதுக்கீடு கொள்கைக்கே சமூகநீதிக்கே எதிராக வாதிட்டார்கள்.

பிறகு உயர் நீதிமன்ற உத்தரவினால், 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புக்கொண்டு விட்டு, அதில் நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை, தகுதி அடிப்படையில் மட்டுமே என்று மத்திய பாஜக அரசு கூறியது.

அதைச் சிரமேற்கொண்டு ஏற்றுக்கொண்ட அதிமுக அரசு அவ்வாறே அரசாணையும் வெளியிட்டது. இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பிசுபிசுக்க வைக்க இவ்வளவு கூத்துகளையும் நடத்தி விட்டு, இப்போது தங்களின் நிர்வாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் அந்தந்த நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது என்றால், ஏன் இந்த முரண்பாடு?

அரசியல் சட்டத்தால் இந்தியா முழுமைக்கும் கூறப்பட்டுள்ள சமூகநீதி, மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையில் மட்டும் எப்படி வேறுபடும்?

மாநிலங்களில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்விகளுக்குச் சேர்க்கப்படும் அரசு மருத்துவர்களே நீட் தேர்வு எழுதித்தான் சேர வேண்டும் என்று கெடுபிடி செய்யும் மத்திய பாஜக அரசு, தனது கட்டுப்பாட்டில் உள்ள 11 கல்லூரிகளில் மட்டும் நீட் வேண்டாம் என்று கூறி, தனி நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன்?

சமூகநீதியை எங்கெல்லாம் சிதைக்க முடியுமோ, எங்கெல்லாம் சூறையாட முடியுமோ அங்கெல்லாம், அனைத்து காரியங்களையும், மத்திய பாஜக அரசு கண்மூடித்தனமாகச் செய்து, இடஒதுக்கீட்டுக் கொள்கையை நசுக்கி அடியோடு நாசப்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, மத்திய அரசின் கீழ் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனித் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய பாஜக அரசு இப்போது அனுமதி வழங்கி விட்டதால், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று அறிமுகப்படுத்திய நீட் தேர்வினை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லாமலேயே முதுநிலை மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திடவும், அந்த மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றிடவும் அனுமதித்திட வேண்டும் என்று மத்திய பாஜக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த 11 மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை மனதில் கொண்டு, முதல்வர் பழனிசாமி உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி, உரிய அழுத்தம் கொடுத்து, தமிழகத்திலும் நீட் தேர்வு இன்றி முதுநிலை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்கவும், அதில் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டினை செயல்படுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இது தவிர, தமிழகத்திலுள்ள 584 மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளுக்கான இடங்களில் அரசு மருத்துவர்களுக்குப் போராடிப் பெற்ற 50 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கு இதுவரை கலந்தாய்வு நடத்தாமல் அதிமுக அரசு காலம் கடத்துவது கவலை அளிக்கிறது.

இந்த இடஒதுக்கீட்டுக்கான அரசாணை 7.11.2020 அன்றே வெளியிடப்பட்ட பிறகும் இன்னும் அதிமுக அரசு யாருக்காகப் பயந்து கவுன்சிலிங்கை நடத்தாமல் இருக்கிறது? ஆகவே, இந்த அரசாணையை உடனடியாக செயல்படுத்தி அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் 50 சதவீத உள் இடஒதுக்கீட்டைத் தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் வழங்கிட முதல்வர் உடனடியாக கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.