டெல்லி: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோயின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இருதய நோய் உள்பட சில நோய் தாக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி போடுவதில் கவனம் தேவை என்றும், மருத்துவர்கள் ஆலோசனைக்கு பிறகே போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட, கொரோனா நோயால் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 6 மாதங்கள் வரை தடுப்பூசி போடக்கூடாது என்றும், கோவிஷீல்ட்டின் இரண்டு அளவுகளுக்கு இடையிலான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்றும், தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.
இந்த நிலையில், தற்போது மத்தியஅரசு தடுப்பூசி போடுவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி,
கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் ,
முதல் டோஸ் போடப்பட்டு கொரோனா உறுதியானவர்கள், நோய் முழுமையாக குணமாகி 3 மாதங்களுக்கு பிறகு 2வது டோஸ் போட வேண்டும்
வேறு நோய்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து குணமானவர்களும் 4-8 வாரங்களுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என தெரிவித்து உள்ளது.
,இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில தலைமைச்செயலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.