சென்னை: மாவட்டங்களில் கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய இரண்டு நாள்களில் 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயண விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாளை (மே 20ந்தேதி) சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (21ந்தேதி) , மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் ஆய்வு செய்கிறார்.

நாளை காலை 8.30 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்படும்‘ முதல்வர் 9.15 மணியளவில் சேலம் சென்றடைகிறார்.

காலை 10 மணிக்கு சேலம் இரும்பு உருக்காலையில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்.

அங்கிருந்து காரில் புறப்படும் முதல்வர் பிற்பகல் 12.15 மணியளவில் பெருமாநல்லூரில் உள்ள நேதாஜி தொழிற்பேட்டையில் தடுப்பூசி பணிகளை துவங்கி வைக்கிறார்.

அதன்பிறகு காரில் கோவை செல்கிறார்.  பிற்பகல் 1.30 மணியளவில் அங்கு சென்றடைகிறார்.

மாலை 5.15 மணிக்கு கொடிசியாவிலும், மாலை 6 மணிக்கு குமரகுரு கல்லூரியிலும் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

அங்கிருந்து இரவு 7.30 மணியளவில் விமானம் மூலம் புறப்படும் முதல்வர் இரவு 8.30 மணியளவில் மதுரை சென்றடைகிறார்.

நாளை இரவு மதுரையில் ஓய்வெடுக்கும் முதல்வர், வெள்ளிக்கிழமை (21ந்தேதி) காலை 10 மணிக்கு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதன்பின், காலை 11 மணியளவில் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வுக்கு பின் அங்கிருந்து திருச்சிக்கு புறப்படுகிறார்.

மாலை 5.10 மணிக்கு திருச்சி எம்.சி.மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறார்.

மாலை 5.45 மணியளவில் என்.ஐ.டி. சென்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெறுகிறார்.

மாலை 6.15 மணியளவில் திருச்சி விமான நிலையம் செல்லும் முதல்வர், அங்கு பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார்.

இரவு 7.30 மணிக்கு திருச்சியிலிருந்து விமானம் மூலம் கிளம்பி சென்னைக்கு இரவு 8.15 மணியளவில் வந்தடைகிறார்.