தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் வெளியே வரவில்லை என்றும் பலியானோர் எண்ணிக்கையை அதிகாரிகள் மறைப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்தினர். மறுநாளும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் ( இரு நாட்களில்) 13 பேர் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்று துப்பாக்கிச் சூட்டிலிருந்து தற்செயலாக விநாடி நேரத்தில் உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்ததாவது:
“காவல்துறையினரால் குறிவைத்து சுடப்பட்ட எண்ணிக்கை மட்டுமே அரசாங்கத்தால் சொல்லப்பட்டு வருகிறது.
கண்மூடித் தனமாக சுடப்பட்டு கீழே சரிந்து விழுந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை உடனுக்குடன் பாளையங்கோட்டை சரகச் சீருடைப் படையினர் வாகனத்தில் அள்ளிப்போட்டுக் கொண்டுச் சென்றார்கள். அப்படி கொண்டுபோகப்பட்டவர்களில் எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்களது பெயர்கள் அரசாங்கப் பட்டியிலில் இடம் பெறவில்லை.
அதேநேரம் நேற்று சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 65 பேர் அல்லாமல் நேற்றுமுன்தினம் அண்ணா நகரில் கைது செய்யப்பட்ட 67க்கும் மேற்பட்டோர் இன்று வரை அலைக்களிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளில் வருவது போல் இயல்பு நிலை என்பது இயல்பாகவெல்லாம் இல்லை” என்று கூறினார்.
இந்த நிலையில் இக்கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக, துப்பாக்கிச்சூட்டில் பலியான கோபிநாதன் என்பவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அவரது பெயர் அரசு வெளியிட்ட பலியானோர் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“குறைந்தது 25 பேர் பலியாகியிருப்பார்கள். ஆனால் 13 பேரைத் தவிர மற்றவர்கள் விபத்தில் இறந்ததாக கணக்குக்காட்ட அரசு திட்டமிட்டிருக்கிறது” என்று சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகிறார்கள்.