கருணாநிதியின் இரு வரிகள் தன்னை மெய் சிலிர்க்க வைத்ததாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அந்த வரிகள் குறித்து அவர் தெரிவித்ததாவது:
“1987ம் வருடம் தமிழகத்தின் அப்போதைய எம்.ஜி.ஆர். மரணமடைந்தார். முதுமை மற்றும் உடல் நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்றார்.
பிறகு தமிழகம் திரும்பியவர், இயற்கை எய்தினார். அவரது மரணத்துக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
ஆனால் எம்.ஜி.ஆர். இறந்த நேரத்தில் சென்னை அண்ணா சாலையில் இருந்த கருணாநிதியின் சிலை உடைக்கப்பட்டது. பெரிய கடப்பாறையை வைத்து, அந்த சிலையின் மார்பில் குத்தி உடைத்தான் ஒரு இளைஞன்.
அந்த படத்தை, முரசொலி நாளிதழில் வெளியிட்ட கருணாநிதி, “இந்தத்தம்பி மார்பில்தான் குத்துகிறான் முதுகில் அல்ல” என்று எழுதினார்.
அந்த இரு வரிகள், என்னை மெய் சிலிர்க்க வைத்தன.” என்று தெரிவித்தார் திருமாவளவன்.