சென்னை

மிழக வனத்துறை நாளை முதல் 3 நாட்களுக்கு சுற்றுலாப்பயணிகள் தொட்டபெட்டாவுக்கு செல்ல தடை விதித்துள்ளது.

சர்வதேச சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா மலைச்சிகரம் புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள தொலைநோக்கி காட்சி முனையை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் உதகைக்கு வரக்கூடிய லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளில் 80% சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவிற்கு சென்று நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வானுயர்ந்த மலைத்தொடர்களையும், பச்சை பசேல் என காட்சியளிக்கும் இயற்கை வளங்களையும், அணைகளையும் கண்டு ரசித்து மகிழ்வது வழக்கம்.

இதனால் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள பாஸ்ட் டேக் நுழைவு கட்டண சோதனை சாவடியில், இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. எனவே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாஸ்ட் டேக் மற்றும் சோதனை சாவடியை மாற்று இடத்திற்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் சோதனை சாவடிக்கு  கேபிள் ஓயர்கள் அமைக்கும் பணிகளும், சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது நுழைவு கட்டணம் மற்றும் சோதனை சாவடி அமைப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.