திருவாரூர்:
தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் திகழ்கிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறும். ஆழித்தேரோட்ட விழாவைத் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனைச் சுந்தரர் கண்டு ரசித்திருப்பதும் வரலாறுகள் மூலம் அறியலாம். இந்தாண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் கொடியேற்றம் கடந்த மாதம் 20ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. கொடியேற்றப்பட்டதை அடுத்து, திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.