சந்தோஷ்

“சும்மா அதிருதில்ல..” என்ற “பஞ்ச்” டயலாக்குக்கு  சொந்தக்காரரான நடிகர் ரஜினியையே அதிரவைத்துவிட்டார் ஒரு இளைஞர்.

ஆம்..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை சந்திக்க இன்று அங்கு சென்றார் நடிகர் ரஜினிகாந்த். அங்கு குண்டடிபட்டு சிகிச்சை பெற்று  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை வரிசையாக சந்தித்து வந்தார். அப்போது ஒரு இளைஞரிடம் வந்தார் ரஜினி.

ரஜினியிடம் அந்த இளைஞர், `யார் நீங்க?” என்று கேட்க.. ரஜினி அதிர்ந்துவிட்டார்.

சுதாரித்துக்கொண்டு, `நான் ரஜினிகாந்த்” என்று பதில் அளித்தார்.

“ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என அந்த இளைஞர் மீண்டும் கேட்க..

அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று சொல்ல…

`சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா?” என அந்த இளைஞர் கேட்க, ரஜினி ரொம்பவே அதிர்ந்துபோய்விட்டார்.

ஆனாலும் சுதாரித்துக்கொண்டு,   சிரித்தபடியே அந்த இடத்தை  கடந்தார்.

இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படி ரஜினியை அதிரவைத்த இளைஞர்..  சந்தோஷ்.

`அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு” என்ற அமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர். அந்த கொடூர தினத்தில் காவல்துறையினரின் தாக்குதலில் பலத்தக் காயமடைந்து தலையில் பத்துத் தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரிடம், “ரஜினியை ஏன் அப்படி கேட்டீர்கள்” என்று வினவினோம்.

அதற்கு சந்தோஷ் அளித்தபதில்:

“தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராட்டம் நடந்து வந்தது. அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் எங்களைச் சந்திக்கவோ, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ வரவில்லை.  காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியானார்கள். மேலும்  . பலர் உயிருக்குப் போராடி வருகிறார்கள். இதெல்லாம் நடந்து இன்றோடு எட்டு நாள்கள் ஓடிவிட்டன.

ரஜினி அதிர்ந்த அந்தக் கணம்

இத்தனை நாட்களாக, இது குறித்து ரஜினிகாந்த் ஏதும் பேசவில்லை. பாதிக்கப்பட்டவர்களை  சந்திக்க வரவும் இல்லை.

ஆனால் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்திருக்கிறார். இந்த ஆலையை மூடவில்லை என்றால் வந்திருக்கமாட்டார்.

இப்போது அவர் வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இன்னும், சில நாட்களில் அவர் நடித்திருக்கும் `காலா’ படம் வெளியாக இருக்கிறது.  இப்போதும் பாதிக்கப்பட்ட மக்களை  சந்திக்காவிட்டால் அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது என்பதை அறிவார்.

அதனால்தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களைச் சந்தித்த்தோடு,  நிதி உதவி  அளிப்பதாகவும் சொல்கிறார். அதனால்தான் எனக்கு வருத்தம். ஆகவேதான் அவரை அப்படிக் கேட்டேன்” – சொல்லி முடித்த சந்தோஷ் நிறுத்தி நிதானமாகச் சொல்கிறார்:

“சமூக விரோதிகளால் கலவரம் ஏற்பட்டது என்று சொல்கிறார் ரஜினி. போராட்டத்தில் கலந்துகொண்ட எங்களை  சமூக விரோதி என்கிறாரா?  அல்லது போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துகொண்டார்கள் என்று அவரது ஏழாம் அறிவை வைத்து கண்டுபிடித்துச் சொல்கிறாரா?

ஒரு நாளாவது எங்களுடன் இணைந்து போராடியிருந்தால்தான் அவருக்கு இதுபற்றி கருத்து கூற அருகதை உண்டு. மற்றபடி எங்களைப்  பற்றிப் பேச ரஜினிக்கு எந்தத் தகுதியும் இல்லை!”

–    ராஜூ