திருவண்ணாமலை
கொரோனா பாதிப்பால் இந்த மாதமும் பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில் கடந்த 15 ஆம் தேதி முதல் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மலையைச் சுற்றி 14 கிமீ தூரம் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கமாகும். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்துதங்கி செல்வார்கள்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தலால் திருவண்ணாமலை கிரிவலத்துக்குத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் பவுர்ணமி இன்று இரவு 7.56 முதல் நாளை இரவு 8.54 வரை உள்ளது. தற்போது அரசு தளர்வுகள் அறிவித்துள்ளதால் கிரிவலம் செய்ய அனுமதி அளிக்கபடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொரோனா பரவல் முழுமையாகக் குறையாததால் இந்த மாதமும் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்யப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று காலை 6 மணி முதல் 21 ஆம் தேதி இரவு 12 மணி வரை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி தொடர்ந்து 19 மாதங்களாகத் திருவண்ணாமலை கிரிவலத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.