ஆ ம்ஸ்டர்டாம்,
உலகளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் சாலை விபத்துகளில் பலியாவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க நெதர்லாந்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடைபாதைகளில் செல்வோரும், சைக்கிளில் செல்வோரும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும்போது போனை பார்த்தபடியோ அல்லது காதில்வைத்து தலையை சாய்த்தபடியோ நடந்து செல்கின்றனர். பல நேரங்களில் எதிரில் என்ன வருகிறது என்று தெரியாமல் அவர்கள் சாலையை கடக்கமுயற்சிப்பதால் விபத்துகள் நிகழ்ந்துவிடுகின்றன.
அதனால் நெதர்லாந்தில் போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகளை நடைபாதைகளில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நல்ல பலன் கிடைக்கும் என அந்நாட்டு அரசு நம்புகிறது. இதுபோன்ற திட்டம் ஏற்கனவே ஜெர்மன் நாட்டிலுள்ள ஆக்ஸ்பர்க் நகரில் பரிசோதனை முயற்சியில் உள்ளது. அதனால்தான் நெதர்லாந்திலும் சில நகரங்களில் பரிசோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. நல்ல வரவேற்பு இருந்தால் அனைத்து நகரங்களிலும் நடைபாதைகளில் டிராபிக் சிக்னல்கள்
பொருத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் இது சரியான தீர்வு இல்லை என்றும் சாலையில் செல்லும்போது செல்பேசிகளை பயன்படுத்தாமல் இருக்கும்படி அறிவுறுத்துவதுதான் சிறந்ததது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.