திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்
திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பெயர்க்காரணம்
வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். திருமாலின் அவதாரங்களில் ஒருவரான நரசிம்மர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது. காமாட்சிகா நரசிம்ம சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு.
தல வரலாறு
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது அஸ்திசைலம் என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு தம்மைத் தாக்க வந்த அசுரர்களை விரட்டிக் கொண்டே செல்ல இவ்விடத்திற்கு வந்த சேர்ந்தார்.
இதனால் பயந்த அசுரக் கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால், இனி அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது என்றெண்ணி, இவ்விடத்தின் எழிலில் பற்றுக் கொண்டு இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். இவ்விடத்திலேயே யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார்.
புராண வரலாற்றின்படி பிருகு மஹரிஷிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. தற்போது நரசிம்மனாக யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இறைவன், இறைவி
இத்தலத்தில் இறைவன் யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் என்னும் பெயர்கள் கொண்டு விளங்குகிறார். இறைவி வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார் என்ற பெயர் கொண்டு விளங்குகிறார். இத்தலத் தீர்த்தம் கனக சரஸ், ஹேம சரஸ் ஆகியன. விமானம் கனக விமானம் எனும் அமைப்பைச் சார்ந்தது.