1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தியாகராஜர் கோவில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?” எனக் கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த இலிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 இலிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ இலிங்கத்துடன், மயன் செய்த இலிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ இலிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற இலிங்கங்கள் சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன.

சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான். பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர். சிவன், “என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது” என்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களைக் காப்பாற்றினார். எனவே, நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன. கிரகங்கள் பக்தர்களுக்குத் தொல்லை கொடுக்கிறதா என்பதைக் கண்காணிக்க விநாயகர் சிலை, கிரகங்களின் சன்னதியில் உள்ளது. எனவே தான் திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும் என்பார்கள்.

தியாகராஜர் கோவிலில் 84 விநாயகர்கள் உள்ளனர். இவர்களில் நால்வருக்கு தனி சிறப்பு உண்டு. அம்மன் சன்னதி பிரகாரத்திலுள்ள, நடுக்கம் தீர்த்த விநாயகரை, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள், டென்ஷனாக இருப்பவர்கள் வழிபடுகிறார்கள்.

மேற்கு கோபுரத்தின் அருகில், சுந்தரருக்கு சிவனால் தரப்பட்ட பொன், நிஜத்தங்கம்தானா என்பதை சோதித்துப் பார்த்து தந்த, “மாற்றுரைத்த விநாயகர்” அருள்பாலிக்கிறார். நகை வாங்கும்முன் பெண்கள் இவரை வழிபடுகின்றனர். சிவன் சன்னதியின் முதல் பிரகாரத்திலுள்ள மூலாதார கணபதி, சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் ஆடும் நிலையில் உள்ளார். யோகா பழகுபவர்கள் இவரை வணங்குவது சிறப்பு. சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி. இந்த விநாயகர் முன்பு நின்றுதான், திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர் “வாதாபி கணபதிம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.

திருவாரூரில் மூலவரை “வன்மீகநாதர்” என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி “கமலாம்பிகையும்” சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். க–கலைமகள், ம–மலைமகள், ல–அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள். வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள். இத்தலத்தின் வடபால் சுக்கனாறும், தென்பால் ஓடம்போக்கியாறும் ஒடுகின்றன.

தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் “திருவாரூர் தேரழகு” என்பார்கள்.

சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டி, தன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.

இத்தலத்தில் உள்ள பக்தர்கள் இராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள். கடன் தொல்லை, உடற்பிணிகள் உள்ளவர்கள், இங்குள்ள ருண விமோசன ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு. இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும். நீலோத்பலாம்பாளை வழிபட்டு, அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது. மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது. மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

வீதிவிடங்க விநாயகருக்கு பின் உள்ள பிரம்மநந்தியை மழைவேண்டி பிரார்த்தித்து, இவர் மீது நீர் நிரப்பினால் மழை கொட்டும். பசுக்கள் கறவாது இருந்தால் இவருக்கு அருகு சாற்றி, அதனை பசுவுக்குக் கொடுத்தால் நன்றாகப் பால் கறக்கும்.

ஜூரம் நீங்க, ஆயுள் அதிகரிக்க இங்குள்ள ஜூர தேவரை மிளகுரசம் படைத்து வழிபடுகிறார்கள். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். நினைத்த காரியம் நிறைவேற தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த “முகுந்தார்ச்சனை” செய்யலாம். முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜருக்கு செய்த “முசுகுந்தார்ச்சனை” செய்யலாம்.