விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியைக் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்துவிட்டார். ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோவிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.
சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி)அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார். பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோவிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார். விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோவிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார். பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள்.
அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.
பிருங்கி முனிவர், சக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.
அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.
இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.
சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, “ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்” தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.
அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.
கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர், “கம்பத்திளையனார்” (கம்பம் தூண், இளையனார் முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் “கோபுரத்திளையனார்” என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.
இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.