திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபத்தன்று மலையேறுவதற்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகப் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல், எவ்வித சிரமமும் இன்றி பக்தர்கள் கிரிவலம் வரவும் திருக்கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் விரிவாக விவரிக்கப்பட்டது.