திருவண்ணாமலை

ன்று மாலை 6 மணிக்குப்  பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்னும் கோஷத்துடன் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படும் தலம் ஆகும்.   இங்குச்  சிவபெருமான் மலை வடிவமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம். ஆண்டு தோறும் இங்கு கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை மாத தீபத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  இரு தினங்களுக்கு முன்பு பஞ்சரத தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகப் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பரம சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரராகத் திருக்கோயிலில் காட்சியளித்ததும் சரியாக மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.

மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டதை லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அந்த நேரம் எழுந்த அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது. இன்று கோவில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் விளக்கேற்றி பக்தர்கள் கார்த்திகை தீப திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.