திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த தீப விழாவை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வந்து சிவனின் ஆசிர்வாதம் பெற்று செல்வர்.  இதுமட்டுமின்றி,  ஒவ்வொரு மாதம்  பவுர்மணமி அன்று அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலையை, சிவனாக எண்ணி  பல லட்சம்  பக்தர்கள் கிரிவலம் செல்வர்.  இருந்தாலும்,  கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பௌர்ணமியன்றும் கிரிவலம் செல்வது சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை இன்று கொடியேற்றத்துடன்   கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக அதிகாலை 2 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் கொடிமரம் முன்பு ஓன்றன் பின் ஒன்றாக பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியவுடன் அண்ணாமலையார் சந்நதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க துலா லக்னத்தில் காலை 05:30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தினசரி உற்சவர் ஊர்வலமும் சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.  தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை மாலை என இரண்டு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற நவம்பர் 22-ஆம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் மாட வீதியில் பவனி வந்து பஞ்சமூர்த்திகள் அருள் புரிவார்கள்.

மேலும்,  திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கார்த்திகை தீபம்  நவம்பர் 26 ம் தேதி  ஏற்றப்படுகிறது. முன்னதாக அதிகாலை  4 மணிக்கு கோவிலில் கருவறையின் முன்பு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீபமலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவிற்காக வரும் ஆன்மீக பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காகவும் அடிப்படை வசதிகளுக்காகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கோவில் நிர்வாகம் என பல்வேறு துறையினர் மும்முரமாக பணி செய்து வருகின்றனர்.