சென்னை: ஜூலை 12-ந் தேதி திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள பிரப்பன் வலசையில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் தென்னகத்தில் முருகப்பெருமானின் வழிபாட்டை தீவிரமாக்கிய மகான். முருகப்பெருமானுடன் அகத்தியரையும் அருணகிரிநாதரையும் கண்டு தரிசித்தார் பாம்பன் சுவாமிகள் 6666 பாடல்களையும் 32 வியாசகங்களையும் எழுதி முருகப்பெருமானைக் கொண்டாடினார் பாம்பன் சுவாமி. தமிழகம் மட்டுமின்றி வெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகன் நாதம், கொல்கத்தா, கயா என்று காசிவரை திருத்தலை யாத்திரை மேற்கொண்ட பாம்பன் சுவாமிக்கு 1918 ஆம் ஆண்டு வெப்புநோய் பாதிப்பு ஏற்பட்டது.
அந்த காலக்கட்டத்தில் பாம்பன் சுவாமிகள், குமார ஸ்தவம் எனும் ஆறு எழுத்து மந்திர நூலை இயற்றினார். அந்த பாடலால் பூரண குணமும் பெற்றார். ஓம் சண்முக பதையே நமோ நம எனத் தொடங்கும் இந்த மந்திர பாடல்களைப் பாடுவோர் சண்முக பெருமாள் இரு தேவியர்களோடு மகிழ்வித்து அமர்ந்த காட்சியைத் தரிசிப்பார்கள் எனச் சுவாமிகள் தமது சீடர்களுக்கு உபதேசித்தார்.
பின்னர் வயது முதிர்வு காரணமாக, பாம்பன் சுவாமிகள் 1929 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி காலை 7.15க்கு மகா சமாதி அடைந்தார். அடுத்த நாள் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் பாம்பன் சுவாமிகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, அவர் விதித்தபடி வங்கக்கடலோரம் சென்னை திருவான்மியூரில் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு மகா சமாதியும் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தை தமிழ்நாடுஅரசு அறநிலையத்துறை கையகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல வழக்குகள் நடைபெற்ற நிலையில், தற்போது பாம்பன் சுவாமி கோவிலுக்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, திருவான்மியூர், மயூரபுரம், ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோவில் 3 ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் அமைந்து உள்ளது. இந்த சொத்தும், இதில் அமைந்துள்ள கோவி லும் நிர்வகிக்க ஸ்ரீமத்பாம் பன் சுவாமிகள், தமது உயிலில் தேஜோ மண்டல் சபா என்ற அமைப்பினை ஏற்படுத்தியிருந்தார். அதன் காரியதரிசி டி.டி.குப்புசாமி செட்டியாரால் 9.9.1984 அன்று தாமாக முன்வந்து இந்து சமய அறநிலையத் துறை வசம் கோவில் ஒப்படைக்கப்பட்டு அன்று முதல் தொடர்ச்சியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து, 1985-ம் ஆண்டு முதல் மகா தேஜோ மண்டலத்தாரால் இது கோவில் அல்ல சமாதி என கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளை கொண்ட அமர்வானது வழக்குகளின் இறுதி தீர்ப்பை கடந்த 27.3.2024 அன்று வழங்கியது. இத்தீர்ப்பில் ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் கோவில் எனவும் அதன் நிர்வாகம் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதற்கிடையில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சின்னசாமி சமாதி நிலையத்தில் கோவில் நிர்வாகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத உழவாரப்பணிக் குழு என்று அழைத்துக் கொள்ளும் ராஜா என்பவர் அருண், முருகேசன், சிவா மற்றும் ரமேஷ் ஆகியோர் ஆதரவுடன் தொடர்ந்து சட்ட விரோ தமான ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்.
இது சட்ட விரோதமான செயலாகும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானதாகும். எனவே, மேற்குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியும், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டும் கோவில் நிர்வாகம் நடைபெறுவதற்கு ஏதுவாக கோவில் நிர்வாகத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அமைப்பினை சின்னசாமி சமாதி நிலையத்திலிருந்து வெளியேற்றி ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோவில் நேரடி ஆளுகை யின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ந்து பொது மக்கள் சுமார் 36 ஆண்டு களாக ஆவலுடன் எதிர் நோக்கும் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி அன்று நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.