சென்னை,
கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து த.மு.எ.ச. மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் (பொறுப்பு) கே.வேலாயுதம் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கை:
“ஒரு பக்கம் தமிழ் உள்பட பல்வேறு மாநில மொழிகளை முக்கியத்துவமற்றதாக ஒதுக்கித்தள்ளும் சமஸ்கிருத-இந்தி திணிப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்துவரும் மத்திய பாஜக அரசு, இன்னொரு பக்கம் தமிழக மக்களைக் கவர்வதற்காக, தமிழ் மக்களின் பாரம்பரியப் பெருமைகளைத் தானும் உயர்த்திப் பிடிப்பதாகக் காட்டிக்கொள்ள முயல்கிறது. அதன் ஒரு பகுதியாகவே, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் திடீரென்று தமிழக சுற்றுப்பயணத்தில் திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் பேசுவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டார். கங்கை நதிக்கரையில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்போவதாக அறிவித்தார்.
உத்தர்கண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் கங்கை நதிக்கரையில் அரிக்கைபேரி என்ற இடத்தில் முதலில் வள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அங்குள்ள சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சங்கராச்சாரி சவுக் என்ற இடத்தில் சிலை திறக்கப்பட இருந்தது. நிகழ்ச்சியில் மாநில ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கப்போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், சிலை திறக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அங்குள்ள சாதுக்கள் எனப்படுவோர் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிலை அங்கிருந்தும் அகற்றப்பட்டு, இறுதியாக அரசுக்குச் சொந்தமான பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.
மாநில ஆளுநரும் முதல்வரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதைப் புறக்கணிக்க, உத்தரப்பிரதேச ஆளுநர்தான் சிலையைத் திறந்துவைத்தார். தமிழகத்திலிருந்து மத்திய இணையமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட சிலர்தான் கலந்துகொண்டனர். தமிழக மக்கள் பெருமிதத்தோடு கொண்டாடி நடந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி இப்படி சர்ச்சைகளுக்கு உள்ளானதற்கும், சிலர் மட்டுமே பங்கேற்கிற ஒரு சம்பிரதாய நிகழ்வாக முடிந்ததற்கும் தருண் விஜய் உள்ளிட்ட பாஜக தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
திருக்குறளையோ, திருவள்ளுவரையோ பெருமைப்படுத்த அவர்கள் உண்மையிலேயே விரும்புவார்களானால், அவரது “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உன்னதமான சமத்துவக் கோட்பாட்டிற்கு நேர் விரோதமான அணுகுமுறைகளையும் செயல்களையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத்தான் பாஜக மேற்கொள்ள வேண்டும். ஆனால், உணவு உரிமை, மொழி உரிமை, பன்முகப் பண்பாட்டு உரிமை, சமூக நீதி என அனைத்திலும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. கல்வி வளாக ஜனநாயகம் முடக்கப்படுகிறது. மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் தேசத்துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைச் சிந்தனைகள் புதிய அவதாரம் எடுக்கின்றன.
இதற்கெல்லாம் எதிராகக் குரல் கூட எழுப்பாமல், திருவள்ளுவருக்கு சிலை மட்டும் நிறுவுவது அப்பட்டமான அரசியல் ஆதாய நோக்கத்துடன்தான். கங்கை நதிக்கரையின் இரண்டு இடங்களிலும் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், வள்ளுவரை ஒரு அரசியல்வாதி என்று நினைத்துவிட்டதாகவும், சங்கராச்சாரி சவுக் ஒரு புனிதமான இடம் என்பதால் அங்கே சிலை வைக்க அனுமதிக்க முடியாதெனக் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற கோணத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆக, வள்ளுவரின் சிந்தனைகளைப் பற்றி எதையும் எடுத்துச் செல்லாமல், விளம்பர வெளிச்சத்திற்காகவே சிலை நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது அம்பலமாகிறது.
குறிப்பிட்ட பகுதியில் ஏற்கெனவே, மத அடையாளம் சார்ந்த பல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக வள்ளுவர் சிலையையும் நிறுவுவது, அவரது குறள் நெறிகள் சார்ந்த அடையாளத்தை அழிக்கும் வேலையுமாகும்.
வெறும் சிலையை நிறுவுவதால் அல்ல, சிந்தனைகளைப் பரப்புகிற, அதன் மூலம் முற்போக்கான மரபுகளைக் கட்டிக்காக்கிற மாபெரும் இயக்கம் தேவை என்பதையே இந்த நிகழ்ச்சிப் போக்குகள் உணர்த்துகின்றன” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.