சென்னை: கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடத்தில் காவி உடையில் திருவள்ளுவரின் உருவப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கல்வித்துறையில் மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. பாரதியாரின் உடையில் காவி சாயம் பூசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந் நிலையில் அரசு ஒளிபரப்பிய கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவரின் உடை முழுவதும் காவி சாயத்தில் இருந்தது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 2 நாட்களுக்கு முன் இந்த நிகழ்ச்சி அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பொருள் சார்ந்த ஒரு விளக்கத்தை அளிப்பதற்காக திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதில் தான் திருவள்ளுவரின் உருவம் காவி உடையில் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த தவறுக்கு காரணமான ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும். தமிழ்ப் பற்று மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது என்று தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் அனைத்தையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் தான் தயார் செய்கின்றனர். குறிப்பிட்ட திருவள்ளுவரின் உருவப்படம் தவறுதலாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.