அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர்

சுவாமி அமைப்பு: 

இங்குள்ள லிங்கம் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் உள்ளது. கருவறையில் லிங்கத்திற்குப் பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். கிழக்கு நோக்கியிருக்கும் இவ்விருவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒத்தாண்டேஸ்வரரை வணங்கினால், மனோபலம் ஏற்படும் என்பதால் இவருக்கு மன அனுகூலேஸ்வரர் என்றொரு பெயரும் உள்ளது.

கரிகாலப்பெருவளத்தான், இத்தலத்திற்கு அருகிலுள்ள மற்றொரு தலத்தில் சிவனை வழிபடுவதற்காகத் தனது யானையில் சென்றான். அப்போது யானையின் கால் ஒரு கொடியில் சிக்கிக்கொண்டது. கையால் அதனைக் களைய முயன்று முடியவில்லை. எனவே, தனது உடைவாளைக்கொண்டு அக்கொடிகளை வெட்டினான். அடியிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன், கொடிகளை விலக்கிப் பார்த்தபோது உள்ளே ஒரு லிங்கம் இருந்தது.

பதறிப் போன மன்னன், லிங்கத்தை வெட்டிய அதே வாளைக்கொண்டு, சிவபாவம் செய்த தனது வலக்கையை வெட்டி வீசினான். அவனது பக்தியில் மெச்சிய சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, இழந்த கையை மீண்டும் உடலுடன் பொருத்தினார். எனவே இவரை கைதந்தபிரான் என்று அழைக்கிறார்கள். மன்னனுக்கு ஆறுதல் மொழி சொல்லியும், சிவனுக்கு அவரது அடியார்களின் கதையைச்சொல்லியும் அவர்களின் மனதை அம்பிகை குளிர்வித்தாள். எனவே இவள் குளிர்வித்த நாயகி என்றழைக்கப்படுகிறாள்.

சிறப்பம்சங்கள்:

இங்குள்ள நடராஜர் அம்பாளைப் பார்த்த படியும், அம்பாள் அவரைப் பார்த்தபடியும் உள்ளனர். நடுவில் நந்தி: மன்னன் தனது கையை வெட்டியபோது அவனைக்காத்து, தர்மத்தை நிலைநாட்டச் சிவன் வேகமாக வந்து மன்னனுக்குக் காட்சி தந்தார். அப்போது, சிவனின் வாகனமான நந்தி அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாம். எனவே, இங்குச் சுவாமிக்கும், அம்பாளுக்கும் நடுவில் நந்தி இருக்கிறது. சுவாமிக்கு முன்புறம் அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி இருப்பதுடன் அவருக்குப் பின்புறத்தில் கோஷ்டத்தையடுத்து கிழக்கு நோக்கியபடி தர்ம நந்தியும் உள்ளது.