திருவையாறு:

திருவையாறு அரசர் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி ஏற்கனவே கடந்த 8ந்தேதி தற்கொலை செய்ய முயன்றபோது காப்பாற்றப்பட்டவர், தற்போது மீண்டும் விஷம் அருந்தி  தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அரசர் கல்லூரி என்ற பெயரில் தனியார் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.  இங்குள்ள மாணவிகள் விடுதியில் 300க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது மாநிலம் முழுவதும் கல்லூரித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசர் கல்லூரியிலும் தேர்வு நடைபெற்று வருவதால்,  48 மாணவிகள் மட்டுமே தங்கியிருந்த செமஸ்டர் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

இந்த கல்லூரி விடுதியில் அரியலூர் மாவட்டம் காவனூரை சேர்ந்த   நித்யா என்ற மாணவி  எம்ஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவர் விடுமுறைக்காக ஊருக்கு சென்றுவிட்டு கல்லூரி வந்து தேர்வை எழுதிய நிலையில், கடந்த 8ந்தேதி (திங்கட்கிழமை) அன்று  விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்செயலாக அதைக்கண்ட மாணவி ஒருவர் போட்ட சத்தம் காரணமாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் போலீசார்  தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் நித்யா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மாணவிகளிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நித்யாவின் தற்கொலை காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.