திருத்தணி: திருத்தனி முருகன் கோவில் பணத்தில் ரூ. 6.13 லட்சத்துக்கு டிபன் சாப்பிட்ட விஐபி யாரு? ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆலயம் காப்போம் என்பது இந்து பக்தர் குழுக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டமைப்பு. நமது கோயில்கள், அவற்றின் பரம்பரை சொத்துக்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பதுடன், ஆகமம் ஒட்டி வழிபாடு மற்றும் கோயில் நிர்வாகம் செய்வதற்கான உரிமைகளை இந்துக்களுக்கு மீட்டுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆலயம் காப்போம் அமைப்பு இயங்க ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் சில நல்ல காரியங்களை செய்துள்ளது. இதில், முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மானிக்கவேலும், இணைந்து அறப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே பல்வேறு கோவில்கள் திட்டமிட்டு இடிக்கப்பட்டு வருவதாகவும், கோவில் சொத்துக்கள் ஆட்சியாளர்களால் அபரிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி வரும் பொன்மாணிக்க வேல், கோவில் சொத்துக்களை மீட்க போராடி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் திருத்தணி முருகன் கோயில் பணத்தை சிற்றுண்டிக்காக ரூ. 6.13 லட்சம் முறைகேடாக பயன்ப்படுத்திய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆலையம் காப்போம் அமைப்பின் சார்பில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மானிக்கவேல் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். காவல் நிலையத்தில் ஆய்வாளர் மதியரசன் புகார் மனு வழங்கிய பின்னர் காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி (அதிமுக ஆட்சி காலம்) அறநிலைத்துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய பிரமுகர்கள், உயர் அரசு அதிகாரிகளுக்கு காலை சிற்றுண்டிக்காக திருத்தணி முருகன் கோயில் பணத்திலிருந்து ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்து 657 ரூபாய் முறைகேடாக செலவு செய்ததாக, இக்கோயில் செயல் அலுவலர் ஆவனத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இருப்பினும், முறைகேடு மீது நடவடிக்கை எடுக்கமல், உடந்தையாக செயல்பட்ட அன்றைய அறநிலைத்துறை ஆணையர் உட்பட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தான் ஐஜி யாக இருந்த போது அமெரிக்காவுக்கு மட்டும் 2622 ஐம்பொன் சிலைகள் கடத்தியது கண்டுபிடித்ததாகவும், இருப்பினும் அச் சிலைகள் மீட்க கடந்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பொன்மாணிக்கவேல் கொடுத்த புகார் மனு விவரம்: , ‘அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில் ஹிந்து சமய அறநிலைய துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, உறுப்பினர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்காக, திருத்தணி முருகன் கோவில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய, அறநிலையத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பின் செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: கடந்த 2017 செப்டம்பர், 18ல், சட்டசபையில் ஹிந்து சமய அறநிலைய துறை மானிய கோரிக்கையின் போது, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்காக, திருத்தணி முருகன் கோவில் பணத்திலிருந்து, 6.13 லட்சம் ரூபாயை எடுத்து, அறநிலைய துறை அதிகாரிகள் முறைகேடாக செலவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோவில்களிலும், 12 சதவீதம் வரி வசூலித்து, ஆண்டுக்கு, 427.89 கோடி ரூபாயை தமிழக அரசு எடுத்துக் கொள்கிறது. இந்த நிதியில் இருந்து, மானிய கோரிக்கையின் போது, காலை சிற்றுண்டிக்கு பணம் எடுக்காமல், திருத்தணி முருகன் கோவில் பணத்தை எடுத்து செலவு செய்தது அதர்மம்.
கோவில் சொத்துக்கள் மற்றும் பணத்தை, கோவில் வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்காக மட்டுமே செலவிட வேண்டும் என்பது விதி. இதை கண்காணிப்பதற்காகவே, ஹிந்து அறநிலைய துறையில் கமிஷனர், இணை ஆணையர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளமும் வழங்கப்படுகிறது. அறநிலைய துறையில் எது செய்தாலும், கேள்வி கேட்க யாரும் இல்லை என்று, ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். அது தவறு என, விழிப்புணர்வு ஏற்படுத்தவே, திருத்தணி முருகன் கோவில் பணம் கையாடல் குறித்து, போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.
திருத்தணி முருகன் கோவிலில், தங்ககோபுரம் அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதை நானே கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால், சம்பளம் வாங்கும் அதிகாரிகள் எந்த வழக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு காரணம் அதிகாரிகளே குற்றவாளிகளாக உள்ளதே.நம் நாட்டின் பாரம்பரிய சொத்தான, 2,622 ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டு உள்ளன. அவற்றின் மதிப்பு, 1,022 கோடி ரூபாய். இந்தச் சிலைகளை மீட்டுக் கொண்டு வர தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.
சிலை கடத்தலில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த சுபாஷ் சந்திரகபூருக்கு சொந்தமான எட்டு இடங்களில் சோதனை நடத்திய போது, 2,622 சிலைகள் நம் நாட்டிலிந்து கடத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 40 சிலைகளை சுபாஷ் சந்திரகபூரின் சகோதரி சுஷ்மாசெரீன் மறைத்து வைத்துள்ளார். இந்த சிலைகளை எல்லாம் கண்டு பிடித்து மீட்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க., – தி.மு.க., ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமல் காதை மூடிக் கொண்டு உள்ளனர்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் அருகே உள்ள காளியம்மன் கோவிலில், 2010ல் அம்மனின் சூலம் திருடு போனது, தற்போது தான் எனக்கு தெரிவந்தது. மேற்கண்ட கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி போலீசில் புகார் கொடுப்பேன்.
இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.