சென்னை: நாடு முழுவதும்அதிர்வலைகளை ஏற்படுத்திய, புள்ளிங்கோ கும்பல் திருத்தணி ரயில் நிலையத்தில் புலம் பெயர் தொழிலாளி சுராஜ் மீது கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருத்தணி ரயில் நிலையம் அருகே, கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், ‘ரீல்ஸ்’ மோகத்தால், வடமாநில வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுப்பட்ட வடமாநில வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார். இதுதொடர்பான வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. இதற்கு வடமாநில தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் போதைக்களமாக மாறிவிட்டதாக, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த புள்ளிங்கோக்களை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்! தமிழக அரசு விளக்கம்! திருத்தணியில் வடமாநில இளைஞர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கம் ளியிட்டு உள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் கஞ்சா போதையில் வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ”27.12.2025 அன்று, திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே, சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருத்தணி காவல் நிலையத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான உதவியும் அளிக்கப்பட்டது.
மேற்கொண்ட புலன்விசாரணையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன், சட்டத்துக்கு முரண்பட்ட 4 இளஞ்சிறாரகள் (Children in Conflict with Law – CICLs) இந்த குற்றத்தை செய்திருப்பது தெரியவந்தது. மேற்கண்ட நான்கு சீறார்களும் 28.12.2025 அன்று கைப்பற்றப்பட்டனர், இளையர் நீதிக்குழு (Juvenile Justice Board – JJB) முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதில், மூன்று CICL-க்கள் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு (Place of Safety) அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு சட்டத்துக்கு முரண்பட்ட இளஞ்சிறருக்கு இளையர் நீதிக்குழுவால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட CICLக்கள் மீது சட்டப்படி தகுந்த மற்றும் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை. பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்கள் பணியாற்றும் இடங்களிலும் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம்செலுத்தப்படுகிறது.
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்கிறதற்காக கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவத்தின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு, தாக்குதல் தொடர்பான இவ்வீடியோவை சமூக ஊடக தளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பரப்பப்படுவதால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த டிசம்பர் 27 அன்று சூரஜ் என்ற இளைஞருக்கும், ஒரு சிறுவர் கும்பலுக்கும் இடையே ரயிலில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரயிலில் நடந்த இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த சிறுவர் கும்பல் சூரஜைத் திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள ஆள்நடமாட்டமில்லாத பாழடைந்த குடியிருப்புப் பகுதிக்கு வலுக்கட்டாய மாக இழுத்துச் சென்று, சூரஜின் தலை, கைகள் மற்றும் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த கொடூரமான தாக்குதலை அந்த கும்பலில் இருந்த ஒரு சிறுவன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சூரஜ், ரத்த வெள்ளத்தில் உதவி கேட்டு தட்டுத்தடுமாறி சாலைக்கு வந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர் கும்பலை அடுத்த நாளே போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என்பதால், அவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு (Observation Homes) அனுப்பப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சிறுவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை கலாச்சாரம் மற்றும் அவர்களிடம் இருக்கும் ரீல்ஸ் மோகம் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தச் சம்பவம் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கார்த்திக் சிதம்பரம்:
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான கார்த்திக் சிதம்பரம் தமிழ்நாடு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் “தமிழ்நாட்டில் இந்த புள்ளிங்கோ அச்சுறுத்தலை இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்” என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில், எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன், தமிழ்நாடு போலீ்ஸ், அதன் வலிமையை நிரூபிக்க நேரம் வந்து விட்டது. மாநிலம் தழுவிய நடவடிக்கை உடனடியாக தேவை. சாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் பெரிய அளவிலான சோதனைகள் செய்யப்பட வேண்டும். அனைத்து குற்றவாளிகளும் வாரத்திற்கு மூன்று முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று தமிழக முதல்வரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:
புத்தகம் பிடிக்க வேண்டிய கையில், அரிவாள்கள் வைத்து, வடமாநில வாலிபரை சிறுவர்கள் வெட்டியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பதற்கு, இதுவே ஒரு சாட்சி. சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டையும், போதை பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவர கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:
இந்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களை கையில் ஏந்தி, போதையில் இப்படி தடம் புரள்வதை பார்க்கையில் வேதனையாகவும், பயமாகவும் உள்ளது.
சிறார்களின் மன ஆரோக்கியம் போதை பழக்கத்தில் சிதைந்து கிடப்பது, சமூகத்திற்கு பெரும் ஆபத்தானது. மக்களின் பிரச்னைகளை தீர்க்க களத்திற்கு வராமல், சினிமா பாணியில் வீடியோ வெளியிடும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சட்டம் – ஒழுங்கோ, சமூக வலைத் எங்கள் வரை சந்தி சிரிக்கிறது. பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான தி.மு.க.,விடம், ஆட்சி அதிகாரம் கொடுத்ததன் பாவத்தை தான், தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை:
இதுதான், தி.மு.க., ஆளும் தமிழகத்தின் இன்றைய தொந்தரவான யதார்த்தம். போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பது, வன்முறை, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான அரசியல் பிரசாரம், கொடிய ஆயுதங்களை எடுத்து செல்வது, இந்த ஆட்சியில் சாதாரணமாகி விட்டது. ஒரு காலத்தில் ஒழுங்காக இருந்த மாநிலத்தை காட்டு ராஜ்ஜியமாக மாற்றியதற்கு, தி.மு.க., அரசு பொறுப்பேற்க வேண்டும்.

பா.ம.க., தலைவர் அன்புமணி:
பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள சிறுவர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகி, ஒருவரை அரிவாளால் வெட்டி, படம் பிடித்து வெளியிடத் துணிந்திருப்பதற்கு, தி.மு.க., அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்தான், தமிழகத்தில் கஞ்சா கலாசாரம் உச்சத்தை அடைந்தது.
அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்ட தி.மு.க., அரசு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டது. அதனால், பொது வெளிகளில் மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன்:
ரீல்ஸ் போடுவதற்காக, வாலிபரை கொலை செய்யும் அளவுக்கு சிறார்கள் சென்றிருக்கிறார்கள். கொடூர மனம் கொண்டவர்களாக சிறுவர்கள் மாறியதற்கு, பரவலாக்கப்பட்டு வரும் கஞ்சா, போதைப்பொருட்கள்தான் காரணம். போதைக்களமாக தமிழகம் மாறி வருகிறது. கஞ்சா போதையில் இன்னொரு சம்பவம் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம். இந்தளவு சமூக சீர்கேட்டிற்கும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்கும் தமிழக மக்கள் விரைவில் பதில் சொல்வார்கள்.
இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், இந்த விவகாரம், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதில் ஒரு நெட்டிசன், தமிழ்நாடு காவல்துறை, நீங்க உயிரோட இருக்கீங்களா? அவன் மேல் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது.” இந்த குண்டர், கத்தியை காட்டி மக்களை மிரட்டும் வீடியோக்களை வெளிப்படையாக பதிவேற்றுகிறான், ஆனாலும் தி.மு.க அரசு வழக்கம் போல அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு சிறுவனை ரயிலில் வெட்டுவது போல் நடித்து கஞ்சா ரவுடிகள் ரீல்களைப் படம்பிடித்தனர். அந்தச் சிறுவன் தங்கள் துஷ்பிரயோகத்தைக் கேள்வி கேட்டபோது, அவனை இழுத்துச் சென்று வெட்டினார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள்: – திமுக அரசாங்கத்தில் கட்டுப்பாடற்ற கஞ்சா விநியோகம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பலரும், பழைய வீடியோக்களையும் பகிர்ந்து, தமிழ்நாடு போலீஸ் ஏன் சமூகவலைதள பிரிவு ஒன்றை தொடங்க கூடாது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பெரும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
[youtube-feed feed=1]