திருப்பாவை – மூன்றாம் பாடல்

ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார்.   இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.

இன்று நாம் திருப்பாவை மூன்றாம் பாடலைக் காண்போம்

திருப்பாவை 3 :

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்

 

பொருள் :

நம் கண்ணன் வாமன அவதாரத்தில்,தன் கால்களால் மூவுலகையும் அளந்த உத்தமன்.நாம் அவனது சிறப்பை பாடி,மலர்கள் சாத்தி நீராடி பாவை நோன்பிருந்தால் உண்டாகும் நண்மைகளைக் கேள்!

உலகில் மழை மாதம் மூன்று முறை பெய்து,தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும்.இதனால்,செந்நெல் செழித்து வளரும்.கயல் மீன்கள் வயல்கள் நடுவே துள்ளி விளையாடும்.குவளை மலர்களில் புள்ளிகள் உடைய வண்டுகள்,தேன் உண்ட மயக்கத்தால் கண் உறங்கும்.எந்த அசைவும்,தயக்கமும் இல்லாமல் பசுக்கள் தங்கள் பருத்த முலைகளை இடையர்கள் தொட்டவுடனே  வள்ளல்கள் போலப் பால் குடங்களை நிரப்பும்.என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் நமக்கு அருளும்.