திருப்பாவை –நான்காம் பாடல்
ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.
இன்று நாம் திருப்பாவை நான்காம் பாடலைக் காண்போம்
திருப்பாவை 4 :
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
பொருள் :
கடல் மழை கண்ணா!
நீ எதையும் ஒளித்து எங்களுக்குக் குறை வைக்காதே!
ஆழமான கடலில் புகுந்து,நீரை முகர்ந்து கொண்டு இடி இடித்து விண்ணில் ஏறி,உலகின் தொடக்கத்தின் முதல்வனான திருமாலின் மேனியைப் போலக் கறுத்து விண்ணை மறைத்து நின்று,நீண்ட அழகான தோள்கொண்ட பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து,சங்கு போல அதிர்ந்து இடி ஒலியெழுப்பி,வெற்றியை மட்டும் கொடுக்கும் அவனுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல் மழை பெய்யனும்.உலகம் அனைத்தும் வாழனும்.
இதற்காக,நாங்களும் மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம்.