திருப்பாவை –21 ஆம் பாடல்

ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார்.   இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.

இன்று நாம் திருப்பாவை 21 ஆம் பாடலைக் காண்போம்

திருப்பாவை 21 :

ஏற்ற கலங்கள் எதிர்பொங்க மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய்

ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள் :

பாலினைக் கறக்கும் போதெல்லாம் பாத்திரங்கள் அனைத்தும் நிரம்பி வழியும் வகையில், பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களின் உரிமையாளனான நந்தகோபரின் திருமகனான கண்ணனே!

நீ எங்களின் வருகையை அறிய வேண்டும்.

நீ உன்னை நாடும் அடியவர்களைக் காப்பதில் மிக உறுதி உள்ளவன்; பெரியவன்.

இவ்வுலகில் எல்லோரும் காணும்படி கண்ணனாக அவதாரம் செய்த ஒளிச்சுடரே!

நீ துயில் நீங்கி எழவேண்டும்.

உன்னுடன் மாறுபட்ட கருத்துக் கொண்டு உன்னை எதிர்த்தவர்கள் எல்லோரும், தங்களுடைய வலிமையை இழந்து, தோற்றுப் போய் உன்னிடம் சரணடைய, உன் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள்.

அவர்களைப் போல நாங்களும் உன்னுடைய புகழினைப் பாட, உன்னுடைய வாசலில் காத்துக் கிடக்கிறோம்.

நீ அதனை ஏற்று எங்களுக்கு அதற்கான பலனைத் தருவாயாக!