திருப்பாவை –10ஆம் பாடல்
ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.
இன்று நாம் திருப்பாவை 10 ஆம் பாடலைக் காண்போம்
திருப்பாவை 10 :
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!
பொருள் :
நோன்பு மேற்கொண்டதன் பயனாக,சொர்க்கம் போன்ற சுகமான சுற்றத்தை அனுபவிப்பவளே!
வாசல் கதவை திறக்காதவர்கள்,எங்களுக்கு மாற்றுப் பதில் கூடவா சொல்லக் கூடாது?
வாசனை மிகுந்து துளசிமாலையைச் சூடிய,எல்லா இடத்திலும் வீற்றிருக்கும் நாராயணன்,நம்மால் போற்றப்பட்டு அருள் எனும் பரிசை நமக்கு அளிப்பான்.
முன்பொருநாள்,இராமன் அவதரித்த காலத்தில் அவனால் யமன் வாயில் இரையாக வீழ்ந்த கும்பகர்ணன், உன்னிடம் தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்குத் தந்தானோ ?
எல்லையற்ற சோம்பலுடையவளே! அரிய அணிகலன் போல சிறந்தவளே !
தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாகப் பெண்ணே !