காஞ்சிபுரம்:

திருப்போரூர் கோவில் அருகே குண்டு வெடித்து 2 வாலிபர்கள் பலியான நிலையில், அந்த குண்டு தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள காயலான் கடை (பழைய இரும்புக்கடை) உரிமையாளர் ரஃபீக் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு நிலவி வரும் சூழலில், மாநிலம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், திருப்போரூர் அருகே உள்ள  மானாம்பதி கிராமத்தில் இருக்கும் பழமையான கங்கையம்மன்  கோவில் அருகே குண்டு வெடித்து 2 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று அந்த பகுதிச்சைசேர்ந்தர இளைஞர் ஒருவரின் பிறந்தநாளை, கங்கையம்மன் கோவிலின் பின்புறத்தில் உள்ள கோவில் குளம் அருகில் கேக் வெட்டி கொண்டாடினார்.  அப்போது, திடீரென அவர்கள் அருகில் திடீரென குண்டு வெடித்தது. இதில், பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்பட  2 பேர் ரத்த வெள்ளத்தில்  பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

விசாரணையில் வெடித்தது, ராணுவ வெடிகுண்டின் ஃபியூஜ் பகுதி என்பது தெரிய வந்தது. இது எப்படி குளத்தின் அருகே வந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகே உள்ள குளத்தில் நடத்திய  தேடுதல் வேட்டையின்போது, ஏற்கெனவே வெடித்ததைப் போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டு,அது  செயல் இழக்க வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்த ராணுவத்தினர், ராணுவ ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் இந்த பகுதியானது, கடந்த  2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளின் ஃபியூஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது எப்படி  அங்கு வந்தது எப்படி என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வெடிகுண்டின் இந்த பகுதியை யாரோ திருடி பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் எடைக்குப் போட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அங்கு இரும்புக் கடை வைத்திருந்த ரஃபீக் என்ற நபரை தேடி வந்தனர். மேலும் அந்த  பகுதியில்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மானாமதி அருகே அனுமந்தபுரத்தில் ராணுவ பயிற்சி மையம் உள்ளதால், அங்கிருந்து ஏவப்பட்ட வெடிகுண்டு வெடிக்காமல் விழுந்திருக்கலாம் என்றும் அது என்னவென்று தெரியாமல் இரும்புக் கடை வியாபாரியிடம் யாராவது விற்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த பகுதியில் காயலான் கடை வைத்திருந்த ரஃபீக் என்பவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் வேறொரு பகுதியில் தங்கியிருந்த நிலையில், அவரை  நள்ளிரவில் கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.