மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை மதிக்காததால், தலைமைச்செயலாளர் , டிஜிபி, ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டும், அதை நிறைவேற்ற மறுத்த திமுக அரசு, அங்கு போலீசாரை குவித்து தேவையற்ற பதற்றத்தை உருவாக்கியது. பின்னர் அதை காரணம் காட்டி 144 தடை விதிக்கப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, உத்தரவை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள்மீதுநீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடரப்பட்டது.
விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, முன்பு டிச.17ல் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்காக தலைமை செயலர் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார். தலைமை செயலரிடமும் ‘‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்’’ என, கேள்வி எழுப்பியதுடன், அரசின் நடவடிக்கையை கடுமையாக சாடினார்.
விசாரணைக்கு ஆஜரான தலைமைச்செயலர், ‘‘நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த உத்தரவில் சட்டம், ஒழுங்கு பிரச்னை இருப்பதால் மேல்முறையீடு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘சட்டம், ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. ஏற்கனவே திண்டுக்கல், கன்னியாகுமரி வழக்குகளில் நான் பிறப்பித்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை’’ என்றார்.
பின்னர் விளக்கம் அளித்த தலைமைச்செயலாளர், இது தொடர்பாக பதிலளிக்க நான்கு வார கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து ‘‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு உரிய பதில் கூறியே ஆக வேண்டும். நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன்’’ என கேட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கு இன்று (ஜன.9) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையில், திருப்பரங்குன்றம் தீபம் வழக்கின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பில், தமிழ்நாடு அரசே தேவையற்ற பதற்றத்தை உருவாக்கியது என நீதிபதிகள் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் மேல்முறையீட்டு வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு…