கோயம்புத்தூர்: பொள்ளாச்சி தொடர் பாலியல் மோசடி வழக்கில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருக்கும் திருநாவுக்கரசு, பிப்ரவரி 12ம் தேதியன்று, தான் ஊரிலேயே இல்லை என்று வைத்த வாதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, குற்றம் நடந்த பிப்ரவரி 12ம் தேதி, காங்கிரஸ் செயல் தலைவர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கும் மயூரா ஜெயக்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க கோவை சென்று விட்டதாக, திருநாவுக்கரசு மற்றும் அவரின் தாயார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வாக்குமூலம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசின் தந்தை கனகராஜ் நீண்டகால காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர். மயூரா ஜெயக்குமார் காங்கிரஸ் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டதும், ராஜசேகர் என்ற காங்கிரஸ் பிரதிநிதி, பொள்ளாச்சிப் பகுதியிலுள்ள அனைத்து காங்கிரஸ் கட்சியினரையும் திரட்டி, மயூரா ஜெயக்குமாருக்கு மரியாதை செய்ய அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த வகையில், திருநாவுக்கரசின் தந்தை கனகராஜையும் அழைத்துச் சென்றுள்ளார். கனகராஜ், தன்னுடன் தன் மகனையும் கூட்டிக்கொண்டு போயுள்ளார். இதை ராஜசேகரும் ஆமோதித்துள்ளார். இந்த சம்பவம் நடந்தது, குறிப்பிட்ட அந்த பிப்ரவரி 12ம் தேதி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி