சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எந்த நிதி ஆவணங்களும் அறக்கட்டளையில் இருந்து யாருக்கும் திருப்பி விடப்படவில்லை என்று தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் அபகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இந்த குற்றச்சாட்டை எழுப்பினார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வலியுறுத்தி உள்ளார்.
இந் நிலையில் எந்த நிதி ஆவணங்களும் அறக்கட்டளையில் இருந்து யாருக்கும் திருப்பி விடப்படவில்லை என்று காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். இவர் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகியும் ஆவார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: ராகுல் காந்தியின் அலுவலகத்தைச் சேர்ந்த கனிஷ்கா சிங் (காங்கிரஸ் தலைவர்) ஆவணங்களை எடுத்துக் கொண்டார் என்ற குருமூர்த்தியின் கூற்று அப்பட்டமாக தவறானது. அறக்கட்டளையின் மீது அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
உயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் பல்வேறு கல்வி மற்றும் மருத்துவ தேவைகள் வழங்கப்படுகிறது. முழுக்க, முழுக்க அறங்காவலர்கள் மட்டுமே அறக்கட்டளையை நிர்வகிக்கிறார்கள். கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் வோஹ்ராவை கட்சியின் செயற்குழு நியமித்ததாகவும், அதில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எந்தப் பங்கும் இல்லை.
அகில இந்திய காங். கமிட்டி அறக்கட்டளைக்கு எந்த விதிமுறைகளையும் ஆணையிட முடியாது. பின்தங்கிய மக்களுக்கு உதவ காமராஜரால் உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை. தேர்தல் காலம் நெருங்கி வருவதால் மக்களின் மனதில் சந்தேகங்களை விதைக்க குருமூர்த்தி முயற்சிக்கிறார். அவரது திட்டம் காங்கிரஸின் பிம்பத்தை சேதப்படுத்தி ராகுல் காந்தியை குறிவைப்பதாகும் என்று குற்றம் சாட்டினார்.