சென்னை,
மே 17இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்துள்ளது.
இதை எதிர்த்து, திருமுருகன் காந்தி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக காவல் ஆணையர் மற்றும் உள்துறை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி திருமுருகன் காந்தி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 17 இயக்கம் சார்பில், சென்னை மெரினாவில் கடந்த மே 21-ம் தேதி தடையை மீறி முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் நான்கு பேரும், குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
இதை எதிர்த்தும், தங்கள்மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில், நினைவேந்தல் கைதுக்குப் பிறகு, மேலும் 17 வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் மற்றும் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.