கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 8ந்தேதி புதுவையில் ‘பந்த்!’

புதுச்சேரி,

பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேர் புதுச்சேரி மாநில நியமன எம்எல்ஏக்களாக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவர்னரின் அதிகார மீறல் குறித்து வரும் 8ந்தேதி புதுச்சேரியில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

புதுச்சேரி சட்டமன்றத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர, 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ள அதிகாரம் உள்ளது. பொதுவாக இதுபோன்ற நியமன எம்எல்ஏக்கள் மாநில அரசின் பரிந்துரையின்பேரில் மத்திய அரசு நியமிப்பது வழக்கம்.

ஆனால், புதுவை கவர்னர் கிரண்பேடி புதுவை அரசின் சிபாரிசு இல்லாமலே தன்னிச்சையாக பா.ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகிய 3 பேரின் பெயரை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து, உத்தரவு பெற்று, 3 பேருக்கும் கவர்னர் கிரண்பேடி  ரகசியமாக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

ஏற்கனவே, நியமன உறுப்பினர்கள் 3 பேரும், தங்களை பதவி பிரமாணம் செய்ய சபாநாயகரை சந்தித்தனர். ஆனால், அவர்  அரசு கெஜட்டில் பெயர் வந்த பிறகுதான் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும் என்று கூறினார்.

ஆனாலும், வேறு சில காரணங்கள் காரணமாக சபாநாயகர் உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை இதனால் நேற்று இரவு கவர்னர் கிரண்பேடியே நேரடியாக தனது அலுவலகத்தில் 3 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததாக கூறினார்.

ஏற்கனவே இதுகுறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், கவர்னரின் இந்த ரகசிய பதவி பிரமாணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடந்து கொண்டு இருக்கும் போது கவர்னர் தன்னிச்சையாக எப்படி 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம்? என அவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

நேற்று இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கட்சிகள், 25-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சியினரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசும், கவர்னரும் அதிகார துஷ்பிரயோகம் செய்து விட்டதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பாராளுமன்றம் முன்பு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்துவது, பாராளு மன்றத்தில் இந்த பிரச்சினையை கிளப்புவது, டில்லி சென்று அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து மத்திய அரசின் மீறல் பற்றி புகார் கூறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கவர்னர் மற்றும் மத்திய அரசை கண்டித்து புதுவை மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

நேற்று 3 எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்ட அறிவிப்பு வந்ததுமே இதை கண்டித்து புதுவை மக்கள் வாழ்வுரிமை இயக்கம், தமிழர் தேசிய இயக்கம், திராவிட விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதேபோல் மேலும் பல அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று புதுவை மக்கள் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அனைத்து அமைப்புகள் கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மாணவர் கூட்டமைப்பு, லோக் ஜனசக்தி, திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம், கம்யூனிஸ்டு (எம்.எல்.), மீனவர் விடுதலை வேங்கைகள், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.

அதில், புதுவை ஆட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு புதுவையின் உரிமையை பறிப்பதை கண்டித்தும், பா.ஜனதா கட்சியினரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்ததை கண்டித்தும் இதற்கு உடந்தையாக உள்ள கவர்னரை கண்டித்தும் வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.

இந்த போராட்டத்துக்கு ஆளும் கட்சியான காங்கிரசும் ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

இதனால் முழு அடைப்பு போராட்டத்தை பெரிய அளவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கவர்னருக்கு எதிரான போராட்டத்தால் புதுவையில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

 


English Summary
8th July, Bandh against Puducherry governor Kiran bedi