சென்னை: சென்னையில் பெய்த மழையால், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

கொரோனா பரவல் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட் தற்போது செயல்படாமல் இருக்கிறது. அதற்கு பதிலாக, தற்காலிகமாக திருமழிசை காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

கடைகளின் கீழே அடுக்கி வைக்கப்பட்ட  காய்கறி மூட்டைகள் அனைத்தும்  நீரில் மூழ்கி நாசமாகின. மார்க்கெட் வளாகம் முழுவதும் நீர் நிரம்பி இருப்பதால் காய்கறி மூட்டைகள் லாரிகளிலிருந்து இறக்கி வைக்காமலே வியாபாரிகள் உள்ளனர்.

ஏற்கனவே மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டதால் வியாபாரம் மந்த நிலையில் உள்ளது. தற்போது, மழையின் காரணமாக வியாபாரிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். ஒருநாள் மழைக்கே, மார்க்கெட் வளாகம் முழுவதும் நீர் நிரம்பி உள்ளது.

இதற்கு சிஎம்டிஏ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில நாட்கள் காய்கறி வியாபாரம் செய்ய வேண்டி இருப்பதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.