சென்னை,
தன்னிடம் உள்ள பழைய பணத்தை மாற்றி வங்கி சென்றார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன். அப்போது, மக்களை போல எனக்கும் கஷ்டம்தான் என்று கூறினார்.
வங்கியில் தன்னிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி, புதிய 2000 ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்டார்.
கடந்த 8ந்தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால் கடுக்க மக்கள் வங்கி வாசலில் நின்று வருகின்றனர். இதனால், அன்றாடம் செலவு செய்வதற்கே மக்களிடம் சில்லறை நோட்டுகள் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளானார். ஏடிஎம் இயந்திரங்களும் சரிவர இயங்காததாலும், சில்லரை தட்டுபாடினாலும் மக்கள் பெரிதும் அவஸ்தை பட்டு வருகின்றனர்.
மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
மத்திய அரசின் ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது முதல் ஏழை, எளிய மக்கள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறி உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தன்னிடம் இருந்த பழைய செல்லாத நோட்டுகளை கொடுத்து, புதிய 2000 ரூபாய் நோட்டு மாற்ற அசோக் நகரில் உள்ள வங்கி ஒன்றுக்கு திருமாவளவன் நேரில் சென்று பணத்தை மாற்றி வந்தார்.
இதுவரை, ராகுல் காந்தி மட்டுமே டில்லியில் பொதுமக்களோடு வங்கிக்கு சென்று பணத்தை மாற்றி சென்றார். அதன் பிறகு எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களும் பணம் மாற்றி சென்றது குறித்து தகவல் ஏதும் இல்லை.
இந்நிலையில் திருமாவளவன் வங்கிக்கு சென்று பணம் மாற்றி வந்தது அங்கிருந்த பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.