சென்னை; ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதி திரும்ப பெற வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 2ந்தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற அனுமதி கோரி கடந்த ஆகஸ்டு மாதம் காவல்துறையில் மனு அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி இளந்திரையின் நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினார். மேலும் காவல்துறையும் 28ந்தேதிக்குள் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது. விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க முயற்சிக்கிறது என்ற குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அக்டோபர் 2 ம் தேதி விசிக சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் திருமாவளவன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாதபோது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் என திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, திருமாவளவன் தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள், திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாக தான் தாக்கல் செய்ய முடியும் என விளக்கம் அளித்து, விசாரிக்க மறுத்துவிட்டனர்.