துரை

ர்நாடகா மாநிலத்தில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மத்தியிலும் ஆட்சி மாறும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 10 ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம் பி அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றார்.    அவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பகுதியில் பிரச்சாரம் செய்து விட்டு மதுரை திரும்பி உள்ளார்.

அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ”நான் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் 12 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து அவர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தினேன்.  அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

பத்து ஆண்டுகளாகக் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அடித்தளமாகக் கொண்டு ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் ஊடுருவ பாஜக முயல்கிறது.  ஆளுநர் ரவி திராவிடம் மாடல் காலியாகிறது என, ஆளுநர் ரவி கூறியது கண்டனத்திற்குரியது. அவர் ஆளுநராக இருந்து கொண்டு திமுகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி வருகிறார்.  எனவே அவர் பதவி விலகவேண்டும்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம் செய்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் புதுச்சேரியில் என்ன வேலை என அம்மாநில ஆளுநர் தமிழிசை  சவுந்தரராஜன் கேட்கிறார்.  அப்படியானால் குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடிக்குக் கர்நாடகத்தில் என்ன வேலை? குஜராத்தில் உள்ளவர் ஏன் உத்திபிரதேசத்தில் போட்டியிடுகிறார்?” 

எனத் தெரிவித்துள்ளார்.