சென்னை

மெரிக்க விசா பெறத் தேவையான விதிமுறைகள் கொண்ட விளக்கம் இதோ

அமெரிக்க விசா வாங்கத் தூதரக வாசலில் அதிகாலை முதல் வரிசை நிற்பதைப் பலரும் பார்த்து இருப்போம். அமெரிக்காவுக்கு வேலை வாய்ப்பு, சுற்றுலா எனப் பலரும் செல்ல விரும்பி வருகின்றனர். நம்மில் பலருக்கு அமெரிக்க விசா பெறத் தேவையான விதிமுறைகள் பற்றித் தெரியாமல் உள்ளோம். இங்கு நாம் அது குறித்த தகவல்களை அறிந்துக் கொள்வோம்.

விசாவுக்கு விண்ணப்பிக்க முதல் முதலாக அமெரிக்க தூதரகம் செல்லும் போது பாதுகாப்பு சோதனைகளை முடித்த பிறகு அலுவலகம் உள்ளே செல்ல முடியும். அங்கு சென்று நேர்காணல் அனுமதியைப் பெற வேண்டும். நேர்காணல் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். அத்துடன் தங்களது அல்லது தங்களுடையை குழந்தைகளக்ஹு பாஸ்போர்ட்டை உடன் வைத்திருக்க வேண்டும்.

நேர்காணலுக்கு செல்லும் போது ஒரு குழுவாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சரியான நேரத்தில் ஒவ்வொரு குழுவும் உள்ளே அழைக்கப்படும். எனவே அந்த இடத்தில் நேரம் காப்பது மிகவும் முக்கியமாகும். எனவே குறித்த நேரத்தில் அலுவலகத்தினுள் இருக்க வேண்டும். சொல்லப்போனால் சற்று முன்னதாக செல்வது மிகவும் நல்லதாகும்.

நேர்காணலின் போது தூதரக ஊழியர் உங்களுடைய விரல் ரேகையை சோதனை செய்வார். உங்களுடன் சிறு குழந்தை அல்லது ஊனமுற்றவர் உடன் இருந்தால் அது குறித்து அவர்களிடம் அறிவித்தால் அவர்கள் உதவுவார்கள். வயதானவர் மற்றும் ஊனமுற்றோருக்குச் சக்கர நாற்காலி வசதி உண்டு. இந்த விரல் ரேகை சோதனை முடிந்ததும் நீங்கள் விசா நேர்காணல் வரிசைக்குச் செல்ல வேண்டும்

குறிப்பு : அலுவலகத்தின் உள்ளே குளிர்சாதன வசதி அதிகமாக இருக்கும் என்பதால் வெளியி உள்ளதை விட அங்கு குளிர் அதிகமாக இருக்கும். அதற்கேற்றபடி உடை அணிந்து செல்லுங்கள்

இந்த நேர்காணல் என்பது 14 வயதுக்குப்பட்டோர், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு கிடையாது. இது குறித்து.தூதரக இணய தளத்தில் விவரங்கள் உள்ளன. அதைப் பார்த்துக் கொள்ளலாம். அத்துடன் நேர்காணல் செய்பவருடன் வருபவருக்கு காத்திருக்க இட வசதி இருக்காது. எனவே நேர்காணலுக்கு யாரையும் உடன் அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்

நேர்காணல் வரிசை முடிவில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜன்னலில் உள்ள தூதரக அதிகாரி உங்களுடன் நேர்காணல் நடத்துவார். அவர் முன் உள்ள சிறிய வழி மூலம் உங்கள் பாஸ்போர்ட்டை அளிக்கவும். நீங்கள் அளித்த விசா விண்ணப்பத்தில் உள்ள விவரத்தையும் பாஸ்போர்ட் விவரத்தையும் அத்ஹிகாரி சோதனை செய்வார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சரியான விடை அளிக்க வேண்டும்

ஆங்கிலம் தெரியாதவர் என்றால் நீங்கள் தேர்வு செய்த மொழியில் கேள்விகளைக் கேட்க ஒரு மொழி பெயர்ப்பாளர் உடன் இருப்பார். நீங்கள் மொழியைத் தேர்வு செய்யாமல் இருந்து உங்களால் ஆங்கிலத்தைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றால் அதிகாரியிடம் மொழி பெயர்ப்பாளர் தேவை எனக் கேட்டுக் கொள்ளலாம். அப்போது மொழி பெயர்ப்பாளர் இருந்தால் உங்களுக்கு அவர்கள் சேவை கிடைக்கும். அலுவலகம் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து இந்தி, மராட்டி, குஜராத்தி. பஞ்சாபி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி பெயர்ப்பாளர்கள் கிடைப்பார்கள்

சுற்றுலா விசா நேர்காணல் ஒரு நிமிடத்தில் முடியலாம். சில வேளைகளில் 2-3 நிமிடங்கள் ஆகும். உங்களுக்கு அமெரிக்கா செல்ல விசா பெறத் தகுதி உள்ளதா என்பதை வினாக்கள் மூலம் அதிகாரி தெரிந்துக் கொள்வார். நீங்கள் அங்கு செல்லும் போது உங்களை கவனித்துக் கொள்ள உள்ள நபர் அல்லது நிறுவனம் குறித்து கேள்விகள் கேட்கபடலாம். எதையும் மறைக்காமல் கூறுவதால் உங்கள் விசா மறுப்பில் இருந்து தப்பிக்கலாம்.

உங்களது விசா விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால் தூதரக அதிகாரி உங்கள் பாஸ்போர்ட்டில் விசாவை அச்சடித்து ஓட்டி அளிப்பதற்காக பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்வார். அது தயாரானதும் நீங்கள் கொடுத்துள்ள எண்ணுக்கு எஸ் எம் எஸ் அல்லது ஈ மெயில் மூலம் தகவல் கிடைக்கும். அந்த தகவலில் கொடுத்துள்ள நேரத்தில் சென்று விசா ஒட்டப்பட்ட பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு வேளை நேர்காணலுக்கு பிறகு உங்கள் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அது குறித்த தகவலும் எஸ் எம் எஸ் அல்லது ஈ மெயில் மூலம் அளிக்கப்படும். உங்கள் கடவுச்சீட்டைத் தூதரகம் திரும்ப அளித்து விடும்.