டில்லி

மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் வழக்கு குறித்து பாஜக மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

முக்கிய பிரபலங்கள் பயணம் செய்ய முந்தைய காங்கிரஸ் அரசு அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தத்தில் கடும் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. அதை ஒட்டி அந்த நிறுவனத்துடன் இடைத் தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிஷல் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவரான அகமது படேல், “மோடி அரசுக்கு தேர்தலில் தோல்வி பயம் வந்துள்ளது. அதனால் தேவையற்ற விவகாரங்கள் மூலம் தனது தவறுகளை திசை திருப்ப முயல்கிறது. ஆனால் மக்கள் வேலவாய்ப்பின்மை, விவசாயிகள் துயர், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றுக்கான காரணத்தை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

தேர்தல் நெருங்குவதால் பல ஆதாரமற்ற மற்றும் நகைச்சுவையான குற்றச்சாட்டுக்களை பாஜக தெரிவித்து வருகிறது. மோடி அரசு அகஸ்டா வெஸ்ட்லாண்ட் குறித்த விவகாரத்தில் அனைத்து விசாரணையும் முடிந்து விட்ட போதே தனது தோல்வியை உணர்ந்துக் கொண்டது.

ஹெலிகாப்டர்கள் வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கடந்த 2018 ஆம் வருடம் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் எந்த ஊழலும் நடைபெறவில்லை என உறுதி அளித்துள்ளனர்.  அத்துடன் மிலன் நீதிமன்றம் கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி எந்த ஒரு இந்தியருக்கும் இதில் பணம் அளிக்கவில்லை என உறுதி செய்துள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் மோடி அரசு மிலன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் உள்ளது. அதே நேரத்தில் இந்திய நீதிமன்றத்தில் குற்றம் சுமத்திய வண்ணம் உள்ளது. திருடர்கள் அனைவரையும் திருடர்களாகவே பார்ப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.