டில்லி

காங்கிரஸ் கட்சி செயலர் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட மாட்டார் எனவும் அமேதியில் போட்டி இடுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வருடம் ஜனவரி மாதம் காங்கிரஸ் செயலராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டார். அத்துடன் அவர் உத்திரப் பிரதேச கிழக்கு பகுதிக்கு பொறுப்பாலராகவும் நியமிக்கப்பட்டார். முன்பு அவர் தனது சகோதரரான அமேதி மற்றும் தாயின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளையும் கவனித்து வந்தார். இம்முறை அவரும் தேர்தல் களத்தில் இறங்குவார் என கூறப்பட்டு வருகிறது.

பிரியங்கா மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என பலரும் கருத்து தெரிவித்தனர். அத்துடன் மோடியை எதிர்க்க காங்கிரசில் அவரே சரியான வேட்பாளர் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரசுக்கு நல்ல ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளையும் தொடர்ந்து காங்கிரஸ் கைப்பற்றி வருகிறது.

இந்நிலையில் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட மாட்டார் எனவும் அமேதியில் இருந்து போட்டியிடுவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன. வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது வயநாடு தொகுதியில் வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது அவருடைய இரண்டாம் தொகுதி என கூறப்பட்டாலும் தனது சகோதரிக்காக தனது தொகுதியை ராகுல் காந்தி விட்டுக் கொடுத்திருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.

வாரணாசி மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளின் வாக்குப்பதிவு மே ஆறாம் தேதி நடைபெற உள்ளது. எனவே பிரியங்கா போட்டியிடுவது குறித்த அறிவிப்பு இறுதி நேரத்தில் வெளியாகி பாஜகவுக்கு காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அளிக்க உள்ளதாக கூறாப்படுகிறது.

பிரியங்கா காந்தி அமேதியில் போட்டியிடுவது காங்கிரசுக்கு மூன்று விதத்தில் உதவும் என கூறப்படுகிறது.

ராகுல் தனது தோல்வி பயத்தால் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்னும் விமர்சனம் மறையும்.

அமேதி தொகுதியில் பிரியங்கா போட்டி இட்டால் வெற்றி வாய்ப்பு உள்ளதால் அமேதி தொகுதி அவர்கள் குடும்பத்தின் உள்ளேயே இருக்கும்.

அது மட்டுமின்றி அமேதி தொகுதியில் போட்டியிட உள்ள ஸ்மிரிதி இராணியை தோற்கடிப்பதான் மூலம் ஸ்மிரிதியின் அரசியல் எதிர்காலத்தை  கேள்விக்குறி ஆக்க முடியும்.