செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.
சென்னையை அடுத்த் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் திருடர்கள் தொந்தரவு அதிகரித்து வருகிறது நகைபறிப்பு, வீடு புகுந்து கொள்ளை அடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காவல்துறையினர் இத் குறித்து ஏதும் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
செங்கல்பட்டு அருகில் உள்ள பழவேலியில் பொதுமக்கள் கொள்ளையர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும் அந்தப் பகுதி எங்கும் மேலும் திருட்டுக்கள் தொடர்வதால் மக்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 20 ஆம் தேதி செங்கல்பட்டு அருகில் உள்ள காந்தலூர் கிராமத்தில் பாபு என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். அவர் வீட்டை அதிகாலை ஒரு மணி அளவில் யாரோ உடைக்கும் சத்தம் கேட்டு மக்கள் வந்துள்ளனர். பூட்டை உடைத்துக் கொண்டிருந்த இருவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.
ஒருவர் எப்படியோ தப்பிச் சென்று விட்டார். மற்றவரை பொதுமக்கள் ஒரு கம்பத்தில் கட்டி வைத்து ஆத்திரத்துடன் தாக்கி உள்ளனர். காயமடைந்த அந்த நபர் மூர்ச்சையாகவே அவரை மக்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
செங்கல்பட்டு காவல் நிலையத்துக்கு மக்களே கொடுத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் அரியலூரை சேர்ந்த பவுல்ராஜ் என்பதும் அவரும் தப்பி ஓடியவரும் இப்பகுதியில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஒரு வாரமாக அதே பகுதியில் உள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.