லாட்டரி திருடனுக்குக் கிடைத்த, வினோதமான கூலி..
கேரள மாநில மலப்புரம் மாவட்டம் தலப்பஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது.
சில திருட்டு வழக்குகள் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்.
தான் நிகழ்த்திய திரு(ட்டு) விளையாடல்களை ஒவ்வொன்றாக அப்துல் சமது, போலீசாரிடம் விலைவாரியாக விவரித்தான்.
அப்துல் சமதுவின் ஒரு திருட்டு, போலீசாரை தூக்கி வாரிப் போடச்செய்தது.
அந்த திருட்டு இது தான்.
சில தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் அங்குள்ள லாட்டரி கடையின் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்துள்ளார், சமது.
கையில் கிடைத்த லாட்டரி சீட்டுகளை எல்லாம் அள்ளி வந்து விட்டார்.
பகலில் அப்துல் சமது ,சின்ன சின்ன கூலி வேலைகளையும் செய்து வந்தார்.
முதல் நாளில் லாட்டரி சீட்டுகளைத் திருட்டு கொடுத்த கடை உரிமையாளர், தனது கடையின் சுவற்றில் போடப்பட்டிருந்த துளையை அடைக்க , அதே அப்துல்சமதை அணுகி உள்ளார்.
‘லாட்டரி கடையா? சுவரா? துளையா?’’ என்று ஒன்றும் தெரியாத அப்பாவி போல் கடை உரிமையாளரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட சமது,அந்த கடைக்குச் சென்று தான் போட்ட துளையைத் தானே சிமெண்ட் பூசி அடைத்துள்ளார்.
துளையை அடைத்ததற்கு, கடையின் உரிமையாளரிடம் கூலியாக அப்துல் சமது,கணிசமான காசும் கறந்துள்ளார் என்பது, சினிமா காட்சியை மிஞ்சும் ரகம்.
– ஏழுமலை வெங்கடேசன்