சரக்கு கடைகளுக்குக்  கல்லூரி பேராசிரியர்கள்

Must read

சரக்கு கடைகளுக்குக்  கல்லூரி பேராசிரியர்கள்

ஆந்திராவில் பள்ளி ஆசிரியர்கள், மதுக்கடை வாசலில் ’கியூ’வில் நிற்கும் குடிமகன்களுக்கு டோக்கன் கொடுக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட செய்தி அறிவோம்.

பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரா,அதனை முறியடிக்க முயற்சி செய்யாமல் இருக்குமா என்ன?

கல்லூரி பேராசிரியர்களை மதுக்கடைகளுக்கு ‘டிரான்ஸ்பர்’ செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அங்குள்ள அகோலா மாவட்டத்தில் ஊரடங்கு முடிந்த பின் நேற்று தான் சந்தைகள், கடைகள் மற்றும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்த்த முர்திசபூர் தாசில்தார் பிரதீப் பவார் என்பவர், அந்த பகுதியில் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை ‘மதுக்கடை ஒருங்கிணைப்பாளர்களாக’ பணியாற்ற ஆணையிட்டுள்ளார்.

வேறு வழியில்லாமல் பேராசிரியர்களும், அதிகாலையில் கண்விழித்து 8 மணிக்கெல்லாம் சரக்கு கடைக்குச் சென்று ’’ஒருங்கிணைப்பாளர்’ பணியைச் செய்ய ஆரம்பித்தனர்.

மதுக்கடையில் ஒருங்கிணைப்பாளரின் வேலை என்ன?

கியூவில் நிற்கும் குடிமகன்களிடம் சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வலியுறுத்துதல், ஐந்து பேருக்கு மேல் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல், எவரும் எச்சில் துப்பாமல் கவனித்துக் கொள்ளுதல் போன்ற பணிகளில் ’இறக்கி’ விடப்பட்டனர், கல்லூரி ஆசிரியர்கள்.

 ’’ஊரடங்கு முடியும் முன் இன்னும் என்னென்ன இறக்கங்களைச் சந்திக்க வேண்டுமோ?’’ என்று புலம்பிக்கொண்டே. எச்சில் சத்தம் கேட்கிறதா என காதை தீட்டிக்கொண்டிருந்தனர், ஆசிரிய பெருமக்கள்.

 – ஏழுமலை வெங்கடேசன்

More articles

Latest article