சென்னை: “முன்பை விட இப்போ கடுமையாக விமர்சிப்பார்கள்” , அதனால், நம் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம் என தொண்டர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
நம்முடைய அரசியல் பயணத்தை நாம் தொடங்கும் முன்பே நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய்-ன் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, கடந்த அக்-27ம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டி வி.சி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், சமார் 5 லட்சம் முதல் 8 லட்சம் பேர் வரை கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய், திமுக, பாஜக என அரசியல் கட்சிகளை கடுமையாக சாடியதுடன், திராவிட மாடல் ஆட்சி ஊழல் ஆட்சி என்றும், பாசிசம் பேசி வருகிறார்கள் என கடுமையாக சாடியிருந்தார். மேலும், . மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சியின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. அதைப்போல மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் தொண்டர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றது. அதே வேளையில் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
“திமுக என்பது ஒரு ஆலமரம், விமர்சனங்களை எதிர்கொள்ளும். காய்த்த மரம்தான் கல்லடி படும், யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவைத் தான் எதிர்ப்பார்கள்; தக்க பதிலடி கொடுப்போம்” என தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
அதுபோல தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “திராவிட மாடலின் கொள்கைகளை தமிழக மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை நேற்று விஜய் பேசியதில் இருந்து தெரிகிறது. அது நகல்தான். தமிழக மக்களின் இதயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கென தனி இடம் நிச்சயம் உண்டு. உழைப்பின் மற்றொரு வடிவமாக துணை முதலமைச்சர் உதயநிதி இருக்கிறார். அவருக்கும் மக்கள் மனதில் இடமுண்டு. இரவு, பகல் பாராமல் அரசியலில் உழைக்க வேண்டும், அது போகப்போக விஜய்க்கு தெரியும்” என்றார்.
விஜயின் கட்சி மாநாட்டால் அதிமுகவுக்கு எள்ளளவும் பாதிப்பில்லை என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக போராட்டக் களத்தின் மறுவடிவமாகவே தவெகவை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என விஜய் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். “இக்கருத்து தெளிவாக இல்லை. குழப்பமான மனநிலை தான் இருக்கிறது.
குறிப்பாக, தவெக தலைவர் விஜய் கூறிய கருத்துக்களில் தெளிவில்லை என்றும், இந்த மாநாடு இன்னொரு படப்பிடிப்பு போல இருந்தது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்து பேசியிருந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விஜய் பேசியது சினிமா வசனம் சினிமா வசனத்தையெல்லாம் கொள்கையா எடுத்துக் கொள்ளாதீர்கள் என பேசியிருந்தார்.
இப்படி விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கும் சூழலில், த.வெ.க தலைவர் விஜய் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தும், தொண்டர்கள் ஆக்கப்பூர்வமாக கருத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ” நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.
அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் ‘தீவிர அரசியல் செய்தலாக’ இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம்.
தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி. தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம். வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன.
நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம்” என விஜய் கூறியுள்ளார்.