தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெகோண்டா கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலில் மட்டும் ஏறாமல் தவிர்த்து வருகின்றனர்.
தினமும் 60க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வாங்கப்பட்டாலும் அதனை பயணிக்க பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.
டிக்கெட் வாங்கியும் ஏன் பயணிக்க மறுக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்த போது, ரயில்வே அதிகாரிகளின் நிபந்தனையே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நர்சம்பேட்டா தொகுதிக்கான ஒரே நிறுத்தம் நெகொண்டா ரயில் நிலையம். ஆனால், திருப்பதி, ஹைதராபாத், டெல்லி, ஷீரடி போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் அங்கு நிற்பதில்லை.
சமீபத்தில், செகந்திராபாத்தில் இருந்து குண்டூருக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பலமுறை பயணிகளின் கோரிக்கையின் காரணமாக நெகோண்டாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இருந்தபோதும், மூன்று மாதங்களுக்கு வருமானம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து இந்த நிறுத்தத்தில் ரயிலை நிரந்தரமாக நிறுத்திச் செல்ல முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் நிபந்தனை விதித்துள்ளனர் இல்லையெனில், ரத்து செய்வதாக கூறியுள்ளனர்.
இதனால் இங்கு நின்று செல்லும் ஒரே ரயிலையும் இழந்துவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு நெகோண்டா கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர்.
‘நெகொண்டா டவுன் ரயில்வே டிக்கெட் மன்றம்’ என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, சுமார் 400 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்கள் மூலம் ரூ. 25 ஆயிரம் நன்கொடை பெறப்பட்டது.
இதன் மூலம், அவர்கள் நெகொண்டாவில் இருந்து கம்மம், செகந்திராபாத் மற்றும் பிற இடங்களுக்கு தினசரி ரயில் டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.
ஸ்டேஷனுக்கு வருமானத்தைக் காட்டவே இப்படிச் செய்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ரயில் நிலையத்தில் அதிக ரயில்கள் நிற்கும் வகையில் செயல்பட திட்டமிட்டுள்ள இவர்கள் டிக்கெட் வாங்கியும் ரயிலில் பயணிக்காமல் உள்ளனர்.