திருவனந்தபுரம்: அதற்குள்ளாகவே காங்கிரஸ் கட்சியின் கதை முடிந்துவிட்டது என்று சொல்வதெல்லாம் முதிர்ச்சியற்ற தனம் என்று கூறியுள்ளார் திருவனந்தபுரம் தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர்.

அவர் கூறியதாவது, “தேசிய அளவில் பாரதீய ஜனதாவை எதிர்த்து நிற்பதற்கான ஒரே மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே. எங்களுக்கான ஒரு மாற்று அரசியல் எப்போதும் இருக்கிறது.

நாங்கள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளோம் என்பது உண்மைதான். அதற்கான காரணங்களை ஆராய்ந்து மீண்டுவர வேண்டியுள்ளது. நரேந்திர மோடி என்ற தயாரிப்பை மிகச்சிறப்பாக விளம்பரம் செய்து வெற்றிபெற்று விட்டார்கள். அதற்காக அவர்கள் பல தளங்களிலும் மிக விரிவான பணிகளை மேற்கொண்டார்கள்.

கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெற்ற வெற்றிகள் நாங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டுகின்றன. கேரள மாநிலத்தில் பாரதீய ஜனதா காலூன்றுவதெல்லாம் நடக்காத காரியம்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் பதவி வழங்கப்பட்டால் நான் தாராளமாக ஏற்றுக்கொள்வேன். ஆனால், அது நான் முடிவுசெய்யக்கூடிய விஷயமல்ல. வேறுபல தகுதியான தலைவர்களும் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதுதான். தற்போதைய காலகட்டத்தில், எங்களுக்கான அவகாசம் மிகவும் குறைவு. எனவே, உடனடியாக பிரச்சினைகளை ஆராய்ந்து, அதிலிருந்து மீண்டுவர வேண்டிய தேவை உள்ளது” என்றார்.