உணவுப் பிரியர்கள் சிலர்.. பயணப் பிரியர்கள் சிலர்..
உணவுப் பிரியர்கள் ஒரே இடத்தில் பலவிதமான உணவுகளை உண்ண விரும்புவர்.
பயணப் பிரியர்கள் பல ஊர்களுக்கு பயணப்பட்டு, அந்த ஊரின் சிறப்பு உணவினை விரும்பி உண்பர். அவ்வாறு பயணப்பட விரும்புபவர்களுக்கு உதவவே இந்தக் கட்டுரை.
தங்களின் வெளிநாட்டு பயணத்தை மறக்க முடியாததாக்கும் ஒன்பது வித்தியாசமான உணவகங்கள் குறித்து காண்போம்.
- டைனிங் போட்- கோ கூட்- தாய்லாந்து:
தாய்லாந்திற்கு இந்தியர்கள் செல்ல வேறுபல முக்கிய காரணங்கள் சொல்லப்பட்டாலும், இங்கே நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது தாய்லாந்தில் உள்ள ஒரு உணவத்தை பற்றி மட்டுமே.. சோனேவா ரெசார்ட்டில், மூங்கிலால் ஆன மரக்கூடுகள் கொண்டு உணவருந்தும் இடத்தினை கோ- கூட் காட்டுமரங்களில் ஏற்பாடு செய்துள்ளனர். மரங்கள் மற்றும் நீர்நிலை என ரம்மியமான சூழல், சாகசக்காரர் போல் கயிற்றில் வந்து உணவுப் பரிமாறும் பணியாளர்கள் என வித்தியாசமான அனுபவத்தை தரும் உணவகத்தின் இணையதள முகவரி இங்கே. சிலப் படங்கள் கீழே:
2. வானுயரத்தில் இரவு உணவு- உலகின் பல்வேறு நகரங்களில்...
நீங்கள் அமர்ந்து உணவருந்தும்வசதி கொண்ட வட்டம் செவ்வகம் என பலவிதமான அமைப்புகளை ராட்சச கிரேன் கொண்டு 160 அடி உயரத்தில் ஏற்றிவிட்டு நிறுத்திவிடுவார்கள். உங்கள் குழுவுடன் நீங்கள் சுற்றுப்புற அழகை ரசித்துக்கொண்டே உணவருந்தலாம். யாருடைய தொந்தரவும் இல்லாமல் ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.
.இந்த உணவகத்தில் உல்லாச விருந்து, திருமணம், வர்த்தக பிராண்டு அறிமுக விளம்பரங்கள் (கபாலி விளம்பரம் விமானத்தில் ஒட்டப்பட்டதுப் போலவே) , புதிய கார் காட்சிக்கு வைப்பது என பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெல்ஜியத்தை தலைமை இடமாகக் கொண்டு 40 நாடுகளில் இயங்கும் இந்த டின்னர்-இன்-த-ஸ்கை இணையதள இணைப்பு இங்கே.
ரங்கராட்டிணத்தில் பத்து நிமிடம் சுற்றினாலோ, உயரத்தில் இருந்து கீழே பார்த்தாலோ வாந்திஎடுப்பவரா நீங்கள் ?.. இதனை நீங்கள் முயற்சிக்காதீர்கள்.
3. ஏஸ்சர்- சுவிசர்லாந்து:
ஒரு ரோப் கார் பயன்படுத்தி இந்த உணவத்தை அடையவேண்டும். உயரத்தை கண்டு அலறுபவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
4. டே-காஸ்-ஏம்ஸ்டர்டன்- நெதர்லாந்து :
ஜெர்ட்-ஜான்-ஹேஜ்மேன் எனும் சமையல் நிபுணர் (செஃப்) இந்த பசுமைக் கட்டிடம் இடிக்கப்படுவதைத் தடுத்து உணவகமாக மாற்றினார்.
5. இதா-அண்டர்-சீ-ரெஸ்டாரண்ட்-ரங்காலித் தீவு-மாலத்தீவுகள்
மாலத்தீவில் இந்தியப்பெருங்கடலின் 16 அடிக்கு கீழே சென்றால் இந்த உணவகத்தை நீங்கள் அடையலாம். மீன் தொட்டிக்குள் அமர்ந்திருப்பது போன்ற பிரம்மிப்புடன் இங்கு உணவருந்தலாம்.
6. குரோட்டா பலாசே- புக்லியா-இத்தாலி:
சுண்ணாம்புப்பாறையில் அமைந்திருக்கும் குரோட்டா பலாசெ உணவகம் மே மாதம் முதல் அக்டோபர் வரை மட்டுமே திறந்திருக்கும்.
7. ஏரோபிளேன் உணவகம்-கலரோடா-அமெரிக்கா:
மற்ற விமானங்களுக்கு ஏரிபொருள் நிரப்ப பயன்பட்டுவந்த ஒரு போயிங்க் கேசி-97 விமானத்தை, 47 அமர்ந்து உணவருந்தக் கூடிய உணவகமாக மாற்றியமைத்து கலரோடாவில் இயங்கி வரும் உணவகம் தங்கள் மனதை கொள்ளை கொள்ளும்.
8. லூமிலினா- ஸ்னோ கேசில்-உணவகம்-கெமி-பின்லாந்து
உறைபனியில் அமைந்திருக்கும் இந்த உணவகத்தில் உள்ளே 23 டிகிரி வெப்பநிலை பராமரிக்கப்படுகின்றது.
இந்த உணவகத்தில் சூடான உணவுகளை சுவைப்பது, சுகமான அனுபவமாக இருக்கும். தேனிலவு தங்குமறை வசதியும் உண்டு.
9. தி-ராக்-சேன்சிபார்-ஆப்ரிக்கா
கடலில் பாறைக்கு மேல் அமைந்துள்ள இந்த உணவகம் ஒருக்காலத்தில் மீனவர்கள் இளைப்பாறுமிடமாக இருந்தது. தற்பொழுது இது கடலின உணவுகள் கிடைக்கும் புகழ்பெற்ற உணவகமாக உருவெடுத்துள்ளது.
வெளிநாடு பயணம் செல்ல வசதியில்லை, சென்னையில் இவ்வாறு ஏதாவது வித்தியாசமான உணவகம் உள்ளதா எனக் கேட்பவர்களுக்கு , அடையாரில் (காந்தி சாலை)உள்ள ரைன் ஃபாரெஸ்ட் தீம் உணவகம் , காட்டிற்குள் சென்று உணவருந்தும் பரவசத்தை ஏற்படுத்தும். இங்கே நீங்கள் உணவருந்தும் போது யாராவது உங்கள் தோளில் கைவைத்தால் ,சற்று தைரியத்துடன் திரும்பிப் பாருங்கள், ஒரு அதிர்ச்சி காத்திருக்கும். இங்கு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது (044 4218 7222). இதன் வாசலில் குழந்தைகளுக்கு இலவசமாக கிளி ஜோசியம், மற்றும் டேட்டூ வரையப்படும் என்பது குழந்தைகளைக் கவரும் அம்சம் ஆகும்.