சென்னை: கோவையில் இளம்பெண் அனுராதா விபத்துக்குள்ளான இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் ஏதும் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அவர் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் இருந்த அதிமுக கட்சி கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது.

அதில் சிக்கி விபத்துக்குள்ளான அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இந்த விபத்தில் அனுராதாவின் இடதுகால் அகற்றப்பட்டது. இந்த விபத்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், இளம்பெண் அனுராதா விபத்துக்குள்ளான இடத்தில் கொடிகம்பம் ஏதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற ஆணைக்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவது இல்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தெரிவித்தார். அரசியல் கட்சி பேனரால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த குடும்பத்திற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ஏன் வசூலிக்கக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதன்பிறகு, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.