சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இன்று அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, உயர்நீதி மன்றம் அதிரடியாக தனது கருத்தை தெரிவித்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலால், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் ஒருமையில் பேசிய விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது.மேலும் இன்று ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றத்திடம், ஜெயராஜ் – பென்னிக்ஸ் பிரேதப்பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பிரதே பரிசோதனை அறிக்கையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது மோசமான காயங்கள் இருந்ததும், அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது .
சாத்தான்குளம் போலீஸ் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில், சிபிஐ பொறுப்பேற்கும் வரை, வழக்கை டிஐஜி திருநெல்வேலி வரம்பு அல்லது சிபி-சிஐடி திருநெல்வேலிக்கு மாற்ற முடியுமா என்றும் நீதிமன்றம் மாநில அரசிடம் பதில் கோரியுள்ளது.
வழக்கு மீண்டும் 12 மணிக்கு மேல் விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.