சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லை என்பது உண்மை என்றும், கொரோனா நோயாளிகள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும்போது, மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் பல்நோக்கு மருத்துவமனை ரூ.250 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதையடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கிண்டி கிங்ஸ் ஆராய்ச்சி மைய வளாகத்தில் பன்னோக்கு மருத்துவமனை அமைவதற்கான நிலம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. மொத்தம் 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிங்ஸ் ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலியாக உள்ள நிலத்தை பன்னோக்கு மருத்துவமனைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள கிங்ஸ் மருத்துவமனை கட்டிடங்கள் 8 ஏக்கரில் அமைந்துள்ளன. அதற்கு கூடுதலாக 4 ஏக்கர் நிலம் வழங்கவும், மீதமுள்ள 12.6 ஏக்கர் நிலம் தமிழகஅரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டுவதற்காக ஒதுக்கவும் பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 500 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைப்பதால் தென் சென்னை மக்கள் பயன்பெறுவர் என்றார்.
பின்னர், தமிழகத்தில் தடுப்பூசி நிலவரம் குறித்து செய்தியளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கான தடுப்பூசியை விலை இல்லாமல் கொடுப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார். இதை தமிழகஅரச வரவேற்கிறது.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பதே உண்மை. மத்திய அரசிடம் இருந்து வரும் 13ஆம் தேதிக்குள் 6.5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதற்கிடையில், தமிழக அரசு 100 கோடி ரூபாய் அளவிற்கு தடுப்பூசி கொள்முதலுக்கக முன்பணம் செலுத்தியுள்ள து. அதற்காக தமிழகத்திற்கு மேலும் 18 லட்சம் தடுப்பூசி வரவேண்டியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 1,01,69,000 தடுப்பூசி வந்துள்ள நிலையில் இன்னும் 36 லட்சம் தடுப்பூசி வரவேண்டியுள்ளது என்றார்.
மேலும், இந்தியாவில் 7 இடங்களில் தடுப்பூசி உற்பத்தி நடைபெற்று வருகிறது. குன்னூரில் உள்ள தடுப்பூசி மையத்தை சமீபத்தில் ஆய்வு செய்தேன். அங்கு தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மட்டும் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தயாரிக்க அந்நிறுவனம் தயாராக உள்ளது. மத்திய அரசு மூலப்பொருட்களை தரும் பட்சத்தில் 8வது இடமாக குன்னூரில் உற்பத்தி தொடங்கலாம்.
கொரோனா நோயாளிகள் இறக்கும்போது மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர், பொதுமக்கள், முக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படியும் வலியுறுத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.